கோவை கோட்டைமேட்டில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே நேற்று முன்தினம் (அக்டோபர் 23) அதிகாலை ஒருவர் காரில் சென்றுகொண்டிருந்தபோது கார் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜமேஷா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். சம்பவ இடத்தில் 11 மணி நேரத்திற்கு மேலாக போலீசார் விசாரணை மற்றும் தடையவியல் ஆய்வு மேற்கொண்டனர்.
Advertisment
தொடர்ந்து உயிரிழந்தவரின் உடல் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவமனை பிரேத பரிசோதனைத்துறை தலைவர் மருத்துவர் ஜெபசிங் தலைமையில் மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது உதவி ஆணையர் தங்கப்பாண்டி தலைமையிலான போலீசார் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்தனர். பிரேத பரிசோதனையின் போது 13 உடல் பாகங்கள் எடுக்கப்பட்டு மேல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்கு பிறகு ஜமேஷாவின் உடல் அவரது மனைவி நஸ்ரத்திடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து அவர்களது உறவினர்கள் உடலை வடகோவையில் உள்ள கபர்ஸ்தானில் முறைப்படி இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்யதனர். இந்தநிலையில், வெடி விபத்தின் எதிரொலியாக கோவை மாநகரில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி தாமரைகண்ணன் கோவையில் முகாமிட்டு விசாரனை மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் இரண்டு டிஐஜி மற்றும் எட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பாதுகாப்பு பணிகளை கண்காணித்து வருகின்றனர்.
10 மாவட்ட காவலர்களுடன் இணைந்து 240 ( Rapid action force) மத்திய அதிவிரைவு படையினர் என சுமார் 3000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அதிவிரைவு படையினர் கோவை உக்கடம் மற்றும் கண்ணப்பன் நகர் பகுதிகளில் இரண்டு குழுக்களாக பிரிந்து வஜ்ரா வாகனங்களுடன் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், டவுன்ஹால், உக்கடம், கோட்டைமேடு மற்றும் கரும்புக்கடை பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“