/indian-express-tamil/media/media_files/2025/06/26/whatsapp-image-2025-2025-06-26-17-59-43.jpeg)
Coimbatore
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) செயல்படும் விதங்கள் குறித்து கோவை மாவட்ட அனைத்து ஜமாத், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுல்தான் அமீது NIA-வின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கினார்.
இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பொய் சாட்சியம் சொல்ல வராத காரணத்தினாலேயே அரபி பாடசாலையைச் சேர்ந்த இருவரை NIA தற்போது கைது செய்திருப்பதாக சுல்தான் அமீது குற்றம் சாட்டினார். கைது செய்யப்பட்டவர்களுக்கு உதவி செய்ய முயன்றவர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும், இது அப்பட்டமான மனித உரிமை மீறல் எனவும் அவர் தெரிவித்தார். NIA-வின் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு கேள்வி எழுப்ப வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அரபி பாடசாலைகள் தீவிரவாதிகளை உருவாக்கும் மையமாக சித்தரிக்கப்படுவதை கூட்டமைப்பு கடுமையாக கண்டித்தது. குண்டு வெடிப்பை நிகழ்த்திய முபின் அரபி பாடசாலையில் படித்தார் என்பதற்காக, அங்கு படித்த அனைவரும் விசாரணைக்கு அழைக்கப்படுவதாக சுல்தான் அமீது சுட்டிக்காட்டினார். இஸ்லாமிய மார்க்கம், மொழி மற்றும் நன்னடத்தையை கற்பிக்கும் அரபிக் கல்லூரிகள், பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் இடங்களாக முத்திரை குத்தப்படுவதை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த தீவிரவாத முத்திரை குத்தப்படுவதால் ஒரே நாளில் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வருவதாகவும், காஷ்மீரில் பாதிக்கப்பட்டு ஒன்றாக அமர்ந்து பேட்டியளிக்கும் நிலைக்கு இஸ்லாமிய பெண்களை NIA உருவாக்கியிருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து தமிழக அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட முபின், 2019 முதல் 2022 வரை தொடர்ச்சியாக NIA கண்காணிப்பில் இருந்தவர் என சுல்தான் அமீது தெரிவித்தார். NIA முறையாக கண்காணிக்க தவறிவிட்டதாகவும், அவர்கள் எதையும் புலனாய்வு செய்து கண்டுபிடிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அனைத்து தகவல்களையும் இஸ்லாமிய அமைப்புகள்தான் NIA-க்கு அளித்ததாகவும், NIA-வின் தொடர் கண்காணிப்பில் இருந்த முபின் எப்படி இவ்வளவு வெடிபொருட்களை சேர்க்க முடிந்தது? என்றும் அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். தல்ஹா என்பவரைத் தவிர இந்த வழக்கில் தொடர்புடைய 17 பேரும் NIA-வால் கண்காணிக்கப்பட்டவர்கள்தான் என்றும் அவர் தெரிவித்தார். இஸ்லாமிய தீவிரவாதி என்று கூறுவது தவறு என்றும் அவர் மறுத்தார்.
இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு மற்றும் அரபி பாடசாலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க பேட்டியளித்தனர். இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்த போதும், தேசிய புலனாய்வு முகமை தங்களை துன்புறுத்தும் விதமாக செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.