ஈஸ்வரன் கோவிலில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் படித்த கோமாளி அண்ணாமலை, என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.
ஆரம்பம் முதலே அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலை இருவருக்கும் இடையே கருத்து மோதல் நிகழ்ந்து வருகிறது. அண்ணாமலை, செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதும், அதற்கு செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்து விளக்கமளிப்பது தமிழக அரசியலில் தொடர்கதையாகி விட்டது. சில நேரங்களில் இருவருமே ஒருவரையொருவர் தரம் தாழ்ந்து விமர்சித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில், கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக மாருதி கார் வெடித்துச் சிதறியது. அதில் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் (25) உடல் கருகி உயிரிழந்தார். கார் வெடித்து சிதறிய இடத்தில் ஆணிகள், கோழிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் திங்கள் கிழமை சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து, கோவிலில் கந்த சஷ்டி பாராயணம் நடந்தது. இதில், அண்ணாமலை தலைமையில் ஏராளமான பக்தர்கள், கந்த சஷ்டி கவசம் பாராயணம் பாடினர்.
இந்நிலையில் கோவை மாவட்டம் ராமநாதபுரத்தில், தமிழ்நாடு நாளையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள கேள்வி எழுப்பிய நிலையில், அண்ணாமலை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் படித்ததாக செய்திகள் வந்தது. இதைவிட கோமாளித்தனம் வேறு எதுவும் இருக்காது. அந்தமாதிரி கோமாளி சொல்லக்கூடிய கேள்விகளை தவிர்த்துவிட வேண்டும்.
செய்திகள் வெளியிடுவதில் பத்திரிக்கையையோ, தொலைக்காட்சிகளையோ ஆளும் கட்சியினர் மிரட்டியது கிடையாதுபத்திரைக்கையாளர்கள் மீது அக்கறை கொண்ட ஒரே தலைவர் நமது மு.க.ஸ்டாலின் தான். அதனால் தான் ஓய்வுபெற்ற பத்திரிக்கையாளர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கியுள்ளார் என்று செந்தில் பாலாஜி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“