கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே இன்று அதிகாலை காரில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் தீயில் கருகி உயிரிழந்தவர் யார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் மீது வழக்குகள் இல்லை. ஆனால், அவர் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை செய்துள்ளது. சதி திட்டத்திற்காக வெடி பொருட்களை வைத்திருந்திருக்கலாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 23) அதிகாலை 4.15 மணிக்கு கார் ஒன்று பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது. காரில் இருந்த நபர் தீயில் கருகி உயிரிழந்தார். அப்பகுதியில் இருந்த மக்கள் இந்த சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். தீயணைப்புத் துறையினர் விரைவாக வந்து தீயை அணைத்தனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியிருப்பது தெரிய வந்தது.
மேலும், கார் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.
கார் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து நடந்த பகுதியில் டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன், மாநகர காவல் ஆணையர் வெ.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.
கார் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நபர் யார், விபத்து ஏற்பட்டது எதேச்சையாக நடந்ததா அல்லது திட்டமிட்ட சதியா என விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர் பெயர் ஜமோசா முபின் என்பது தெரிய வந்துள்ளது. இவர் உக்கடம் ஜி.எம் நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் பழைய துணி விற்பனை செய்யும் வேலை பார்த்து வந்தார் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரது பின்னணி குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, “கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் மீது வழக்குகள் இல்லை. ஆனால், அவர் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை செய்துள்ளது. சதி திட்டத்திற்காக வெடி பொருட்களை வைத்திருந்திருக்கலாம்” என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”