/indian-express-tamil/media/media_files/2025/08/27/covai-vinayagar-2025-08-27-09-07-39.jpg)
விநாயகர் சதுர்த்தி: கோவையில் பலத்த பாதுகாப்புடன் கோலாகலக் கொண்டாட்டம்
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கோவை மாநகரிலும், மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேசமயம், நகரிலுள்ள முக்கிய விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கோவை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்றன. ஆசியாவிலேயே ஒரே கல்லால் ஆன மிகப் பெரிய விநாயகர் சிலையான இங்கு, இன்று அதிகாலை வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகமும், மகா அபிஷேகமும் நடைபெற்றது. 16 வகையான வாசனை திரவியங்கள், பஞ்சாமிர்தம், தேன், பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, 4 டன் மலர்களால் விநாயகருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, கொழுக்கட்டை, அதிரசம், லட்டு போன்ற இனிப்புப் பலகாரங்களுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு வழிபட்டனர்.
கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா: கோயில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் #Coimbatore#VinayakaChaturthi2025pic.twitter.com/s2kBBljMzt
— Indian Express Tamil (@IeTamil) August 27, 2025
பிரசித்தி பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய காவல்துறை சார்பில் தற்காலிக பேரிகார்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. இதேபோல், இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த சிலைகளுக்கும் பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
கோவை மாநகரில் 1,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 3,500 போலீசார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். மாநகரில் 714 சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 1,600 சிலைகள் வைக்கப்பட உள்ளன. சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெறும் நாட்கள் (முதல், 3 மற்றும் 5-ம் நாள்) மற்றும் பதற்றமான பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். அதிவிரைவுப் படை (RAF) மற்றும் 4 பட்டாலியன் படையும் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டு உள்ளன.
மேம்பாலங்கள் மற்றும் சிக்னல் பகுதிகளில் மாநகராட்சியுடன் இணைந்து புதிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. மொத்தமாக 2,000 கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேக வாகனங்களைக் கண்காணிக்க 12 இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் நவீன கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.