கோவை மாநகரில் உக்கடம், டவுன்ஹால் ஓப்பணக்கார வீதி, ராஜவீதி, பெரியகடை வீதி, காந்திபுரம், 100 அடி சாலை, கிராஸ்கட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் வணிகக் கடைகள் உள்ளன.
தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்மஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களிலும் மேலும் ஆடி மாதத்திலும் இப்பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். வணிக வளாகங்கள் அதிகம் உள்ள இப்பகுதிகளில் வாகனங்கள் சாலைகளிலேயே நிறுத்தப்பட்டு வருகின்றன.
கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டு ஒப்பந்ததாரர்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தாலும் தொடர்ந்து சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவது தொடர் கதையாகவே உள்ளது.
இந்நிலையில் ஆர்.எஸ். புரம், உக்கடம், ஒப்பணக்காரர் வீதி ராஜவீதி, பெரியகடை வீதி, ரேஸ்கோர்ஸ் கிராஸ்கட் சாலை, வெரைட்டிஹால் சாலை, பாரதிபார்க் சாலை, என்.எஸ்.ஆர் சாலை உள்ளிட்ட மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகள் கடைகள் அதிகம் உள்ள சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த சாலைகளில் நிறுத்தப்படும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான கட்டணம் ஒப்பந்ததாரர்கள் மூலம் வசூலிக்கப்படும் எனவும் இதன் மூலம் வணிக வளாகங்கள் மக்கள் அதிகம் கூடும் சாலைகளில் கூடுதல் போக்குவரத்து நெரிசலும் கட்டணக் கொள்ளையும் மட்டுமே நடைபெறும் என்றும் இதன் மூலம் ஒப்பந்ததாரர்கள் மட்டுமே பயனடைவார்கள், மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
ஏற்கனவே ராஜவீதி, மணிக்கூண்டு, காந்திபுரம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மாநகராட்சி சார்பில் கட்டணத்துடன் கூடிய பார்க்கிங் வசதி செய்து தரப்பட்டு உள்ளது.
இருந்தாலும் அதில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்படுவதில்லை, கூடுதலாக 20 முதல் 30 ரூபாய் அதிகமாகவே வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஏற்கனவே நெரிசல் மிகுந்த இப்பகுதிகளில் உள்ள சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதைக் கட்டுப்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு கட்டணம் வசூலிப்பது என்பது மேலும் போக்குவரத்து நெரிசலையே ஏற்படுத்தும்.
இதற்கு பதிலாக மல்டிலெவல் வாகன நிறுத்தம் அமைத்து போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல எலக்ட்ரானிக் முறையிலான பணம் செலுத்தும் முறையை கொண்டு வருவதன் மூலம் கட்டணக் கொள்ளையும் தவிர்க்கப்படும் சமூக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“