பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
Coimbatore | Pm Modi | Tamilnadu Bjp: கோவையில் வருகிற 18-ஆம் தேதி பிரதமர் பங்கேற்கும் வாகன பேரணி நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கருதி கோவை மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனையடுத்து, கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் காவல் அதிகாரிகளுடன் மத்திய சிறப்பு பாதுகாப்பு படை எஸ்.பி.ஜி குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர். சுமார் இரண்டு மணி நேர ஆலோசனைக்கு பிறகு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர்.
இந்நிலையில், பிரதமர் நிகழ்ச்சிக்கான அனுமதி மறுப்பு மற்றும் மத்திய பாதுகாப்பு குழுவினருடனான ஆலோசனை தொடர்பாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் கருத்து கேட்க முற்பட்டபோது, அவர் தெளிவான முடிவே இல்லாமல் கருத்து கூற முடியாது எனக் கூறினார்.
வருகிற 18 ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுவதாலும், இதுவரை கோவையில் எந்த ஒரு ரோட் ஷோ நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்கவில்லை என்பதாலும் பிரதமருக்கான தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்திருப்பதாக கோவை மாநகர காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனிடையே, பா.ஜ.க மாநில பொதுசெயலாளர் ஏ.பி.முருகானந்தம் தலைமையில் பா.ஜ.க-வினர் பிரதமருக்கு பாதுகாப்பு வேண்டுமென காவல் ஆணையரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், வாகன பேரணிக்கு அனுமதி கோரி நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“