Advertisment

ஓய்வூதியம் பெற இடைத்தரகரை அணுகச் சொன்ன அதிகாரிகள்: கோவை தூய்மை பணியாளர் பரபர குற்றச்சாட்டு

ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை அளிக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாகவும், இடைத்தரகர்களை அணுகுமாறு கூறியதாகவும் ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Coimbatore cleanliness worker alleged Officers asked to approach middleman to get pension Tamil News

கோவையில் ஓய்வூதியம் பெற இடைத்தரகரை அணுகச் சொன்ன அதிகாரிகள் குறித்து தூய்மை பணியாளர் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

coimbatore: ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்காமல் கோவை மாநகராட்சி மத்திய மண்டல அதிகாரிகள் நடந்து கொள்வதாகவும் இடைத்தரகர்களை வைத்து ஆவணங்களை கொண்டு வருமாறு தெரிவிப்பதாகவும் ஓய்வு பெற்ற  தூய்மை பணியாளர் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தார். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Advertisment

கோவையில் வழக்கறிஞராக இருப்பவர் புகழேந்தி. இவரது தந்தை இளங்கோவன் மற்றும் தாயார் அல்லி ஆகியோர் கோவை மாநகராட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தர தூய்மை பணியாளர்களாக பணியாற்றினர். இவர்கள் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றதாகவும், அதனைத் தொடர்ந்து தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை அளிக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாகவும், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தாயாருடன் மாநகராட்சி அலுவலகத்தில் அளித்தார். 

இது தொடர்பாக வழக்கறிஞர் புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசியது பின்வருமாறு:-

"எனது தாய் மற்றும் தந்தையார் இருவரும் கோவை மாநகராட்சி 82 வது வார்டில் நிரந்தர தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வந்தனர். அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றனர். அவர்களுக்கான பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் தற்போதுவரை வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகிறார்கள். 

அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவது தொடர்பாக கோவை மத்திய மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் கிரிஜா என்பவரை அணுகிய போது, இது தங்களுக்கு தெரியாது என கூறிவிட்டார். மேலும், இடைத்தரகர்கள் மூலம் அதற்கான பணிகளை முடித்துவிட்டு ஆவணங்களை சமர்ப்பித்தால் மேற்கொண்டு பணிகளை செய்வோம், அதற்கு 20 ஆயிரம் அல்லது அதற்கும் மேல் செலவாகும் எனவும் அலட்சியமாக பதில் அளித்தார்.

இதுகுறித்து உயர் அதிகாரியான மத்திய மண்டல உதவி ஆணையாளர் செந்தில்குமரனிடம் தெரிவிக்க சென்றால், எங்களை நீண்ட நேரமாக காக்க வைத்தது மட்டுமில்லாமல் கண்டு கொள்ளாமல் சென்று விட்டார். எனது தாய் மற்றும் தந்தைக்கு வரக்கூடிய ஓய்வூதிய தொகையைக் கொண்டு அவர்களது மருத்துவ செலவுகளை பார்த்துக் கொள்ள இயலும். இந்த தொகை கிடைக்காததால் பெரும் சிரமப்படுகிறார்கள். எனது தந்தையார் நடக்கக்கூட இயலாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார். இப்படிப்பட்ட நேரத்தில் அதிகாரிகள் மிக அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். 

எனவே மாநகராட்சி ஆணையாளர் எங்களுக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை விரைந்து கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியமாக செயல்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் கிரிஜா மற்றும் செந்தில்குமரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இடைத்தரகர்கள் மூலம் செல்லும்போது அதிகாரிகளுக்கும் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக கேட்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

கோவை மாநகராட்சியில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்கள் பலரும் ஓய்வூதியம் கிடைக்காமல் பல நாட்களாக போராடி வரும் நிலையில், அதற்கான பணிகளை செய்ய வேண்டிய அதிகாரிகளே அவர்களது பணிகளை செய்யாமல் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து இடைத்தரகர்கள் மூலம் வருமாறு கூறுவது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் கண்டனத்திற்குரியது எனவும் சமூக ஆர்வலகர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment