கோவை மாவட்டத்தில், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் இன்று (மார்ச் 3) ஆய்வு மேற்கொண்டார்.
கோவையில், 128 மையங்களில் 363 பள்ளிகளைச் சேர்ந்த 35,999 பேர் தேர்வில் எழுதுகிறார்கள். அதில் 16,650 மாணவர்கள், 19,319 மாணவிகள் அடங்குவர். இந்நிலையில், சித்தாபுதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நடைபெறும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
இதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, "முதல் நாளான இன்று 35,999 மாணவர்கள் தேர்வு எழுதுக்கின்றனர். நெல்லித்துறை ஊராட்சிக்கு உட்பட கடம்பன் கோம்பை எனும் மலை கிராமத்தில் சாலை வசதிகள் இல்லாததால் இறந்தவரின் உடலை தோளில் தூக்கி சென்ற சம்பவம் குறித்து கோட்டாச்சியர் தலைமையில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்பகுதியில் சாலை அமைக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வனத்துறையின் தடையில்லா சான்றிதழ் வாங்கப்பட்டுள்ளது. செல்போன் டவர் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் 2 அல்லது 3 மாதங்களில் அனைத்து பணிகளும் செய்து முடிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.