மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இன்று (ஜன.8) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.
அப்போது கோவை ராமாராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் (81) என்ற மூதாட்டி முகாமிற்கு வந்தார். கணவர் இல்லாத நிலையில் வயது முதிர்வு காரணமாக கூலி வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளதாகவும் தனக்கு அரசின் முதியோர் உதவித் தொகை கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/8knocKfgaevJoqAMLXWt.jpeg)
இந்த நிலையில் திடீரென்று மூதாட்டி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதனை கண்ட பொது மக்கள் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் உதவியுடன் 108 அவசர ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏற்கனவே இதுபோல் மனு அளிக்க வந்த முதியவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அரங்கேறிய நிலையில் தற்போது மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பானது.
வாரந்தோறும் நடைபெறும் இந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில் முதியோர்கள் மனுவை பெறுவதற்காக தனி அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“