கோவையில் பயின்று வந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரை சக மாணவர்கள் பிராங் செய்ததால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம், பச்சையப்பன் நகர் முதல் வீதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் சத்யநாராயணன் என்பவர், கோவை மாவட்டம் காளப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் கலை அறிவியல் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார்.
நேற்று முன்தினம், இவரது வகுப்பில் பயின்று வந்த சக மாணவர்கள் மூன்று பேர் சத்தியநாராயணனை பிராங் செய்து தாக்கியதாக தெரிகிறது. மேலும், மூன்று மாணவர்களும் சேர்ந்து சத்தியநாராயணனுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட சத்தியநாராயணன், தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மூன்று மாணவர்களை 15 நாட்கள் சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கல்லூரி மாணவர் பிராங் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.