கோவை மாணவி லோகேஸ்வரி மரணம்: பயிற்சியாளருக்கு போலி சான்றிதழ் தயாரிக்க உதவியவர் கைது!

லோகேஸ்வரி  பரிதாபமாக உயிரிழந்தது  வீடியோ மூலம் தெரிய வந்தது.

கோவையில் லோகேஸ்வரி என்ற மாணவி பேரிடர் மேலாண்மை பயிற்சியில்  பலியான விவகாரத்தில் பயிற்சியாளருக்கு போலி சான்றிதழ் தயாரிக்க உதவிய அசோக் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில்  உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று முன்தினம் நடைப்பெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியில் லோகேஸ்வரி என்ற 19 வயது மாணவி  பரிதாபமாக உயிரிழந்தார். கல்லூரியில் பயிற்சி நடத்த வந்த ஆறுமுகம் என்ற பயிற்சியாளர் 2 ஆவது மாடியிலிருந்து  தள்ளி விட்டதில் லோகேஸ்வரி  பரிதாபமாக உயிரிழந்தது  வீடியோ மூலம் தெரிய வந்தது.

இந்த சம்பவத்தில் பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டார்.  அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் போலி பயிற்சியாளர் என தெரிய வந்தது.ஆறுமுகம் டெல்லியில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பயிற்சி பெற்றதாகவும், அதற்கான கடிதத்தை கல்லூரி நிர்வாகத்திடம் காண்பித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்ததாகவும் திடுக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் வெளியாகின.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த கடிதம் போலியானது என்பது உறுதியானது. இதனையடுத்து போலி சான்றிதழ் தயாரிக்க உதவிய அசோக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  அவரிடம் ஈரோட்டை சேர்ந்த தனிப்படை காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

ஆறுமுகம், அசோக் ஆகியோரிடம்  விசாரணை இன்னும் தீவிரப்படுத்தப்படவுள்ளதால்  கைது எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

×Close
×Close