கோவையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது.
இதில் பிரபல மேஜிக் கலைஞர் தயா, கண்களை கட்டி கொண்டு தலையில் முகமூடி அணிந்தபடி, தனியார் ராயல் கேர் மருத்துவமனையின் இரு சக்கர ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார் .
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கண்களை கட்டி கொண்டு முகமூடி அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டுவது என்பது தகுந்த பயிற்சி இருந்தால் சாதிக்கலாம். ஆனால் ஹெல்மட் அணியாமல், மது அருந்தி வாகனம் இயக்கினால் எவ்வளவு பயிற்சி இருந்தாலும் அது பாதுகாப்பானது அல்ல என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என்பதற்காக இது போன்ற நிகழ்வு நடைபெறுகிறது.
குறிப்பாக இளைஞர்களுக்கு இது போன்ற விழிப்புணர்வு அதிகம் ஏற்பட வேண்டும். ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணிவது மிக முக்கியம். மேலும் பெற்றோர்களும் பதினெட்டு வயது நிரம்பாதவர்களுக்கு வாகனங்கள் வாங்கி கொடுப்பதை நிறுத்த வேண்டும்.
இதையும் மீறி பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளோர் வாகனங்கள் இயக்கினால் அவர்களது பெற்றோர்கள் மீதும் போக்குவரத்து சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“