/indian-express-tamil/media/media_files/2025/06/10/Rl63nMHvABoNAlqU0LjK.jpeg)
Coimbatore
கோவை, ஜூன் 10: கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாக வீரியமடைந்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரும் சாலை மறியல் போராட்டமாக வெடித்தது. இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்தும், ஒப்பந்த முறையை ரத்து செய்து மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
நேற்று (ஜூன் 9) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இன்று (ஜூன் 10) இந்த எண்ணிக்கை 300-ஐ தாண்டியது. தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஓய மாட்டோம் என முழக்கமிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களின் முக்கிய கோரிக்கைகள்:
கோவையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி நடத்திய தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் போராட்டக்காரர்களை கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. pic.twitter.com/WgjAv6MH4P
— Indian Express Tamil (@IeTamil) June 10, 2025
பணி நிரந்தரம் செய்யும் வரை அரசாணை 62 மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி 'சம வேலைக்கு, சம ஊதியம்' வழங்க வேண்டும்.
தொழிலாளர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் PF உள்ளடங்கிய சம்பள ரசீதை வழங்க வேண்டும்.
ESI மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை உடனடியாக வழங்க வேண்டும்.
குறைந்த ஊதியம்: ஒப்பந்ததாரர்கள் மற்றும் மாநகராட்சி மீது குற்றச்சாட்டு!
ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் 770 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மாநகராட்சி நிர்வாகம் வெறும் 540 ரூபாய் மட்டுமே வழங்கி வருவதாக தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டினர். இது குறித்து ஒப்பந்ததாரர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியபோது எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
சாலை மறியல் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்ததால், காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், காவல்துறையினர் அவர்களை குண்டுகட்டாக கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். இந்த திடீர் கைது நடவடிக்கையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தங்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு விரைந்து பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என்பதே தூய்மைப் பணியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.