கோவையில் சிங்கம் பட பாணியில் கஞ்சா விற்பனையாளர்கள் அனைவரையும் ஒரு வளாகத்தில் ஒருங்கிணைத்து, அவர்களுக்கு அறிவுரை வழங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட மாட்டோம் என்ற உறுதி மொழியை காவல்துறையினர் எடுக்க வைத்தனர்.
கோவை மாவட்ட பிஆர்எஸ் வளாகத்தில் உள்ள அரங்கில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மற்றும் கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்த அரங்கில் கோவை புறநகர் பகுதிகளில் கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரிகள் பலரும் அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கி அவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
அவர்களிடம் கஞ்சா எங்கிருந்து இவர்களுக்கு வழங்கப்படுகிறது, இதன் பின்னணியில் உள்ள நபர்கள் உள்ளிட்ட குறித்து விசாரணை செய்யப்பட்டது.

இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்து அவர்களுக்கான தொழில் மற்றும் உதவிகள் செய்யப்படும் என அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர்.
தொடர்ந்து பேசிய அதிகாரிகள், ஒரிசா திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் கஞ்சா கடத்தி வரப்படுவது தெரியவந்துள்ளது. கோவா பெங்களூர் உள்ளிட்ட பகுதிகள் வரை தனிப்படை காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா இல்லாத கிராமங்கள் என்ற பெயரில் புறநகர் பகுதியில் உள்ள ஊராட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிட்டோரை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான உறுதிமொழிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
கஞ்சா விற்பனை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்கள் வாயிலாகவும் பரவி வருவது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் தமிழக முதல்வரின் கஞ்சாவிற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“