கோவையில் கடந்த சில நாட்களாக அதிகமான வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Advertisment
இந்த சூழலில், சில நாட்களுக்கு முன் கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனராக இருந்த முருகவேல் மாற்றப்பட்டு, அவருக்கு பதில், பார்த்திபன் நியமிக்கப்பட்டார். மேலும், சிங்கநல்லூர் துணை ஆணையர் அருண் சிறப்பு புலனாய்வு பிரிவு ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், பொள்ளாச்சியில் பல இடங்களில் வெடிகுண்டுகள் வீசப்படும் என்ற மிரட்டல் கடிதம் இன்ஸ்பெக்டருக்கு வந்தது.
இதுகுறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது: பொள்ளாச்சியில் 16 இடங்களில் வெடிகுண்டுகள் வீசப்படும் என போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் கடிதம் வந்தது.
பொள்ளாச்சி போலீஸ் நிலையத்துக்கு மிரட்டல் கடிதம் எழுதியவர் பற்றிய தகவல்களை சேகரிக்க தனிப்படை அமைத்து உள்ளோம்.
பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள தபால் நிலைய முத்திரை அந்த கடிதத்தில் இருப்பது தெரிய வந்தது. எனவே அங்கு தபால் போட வந்தவர்கள் யார் என்பதை அறிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தனிப்படை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
சட்டம் - ஒழுங்கு பாதிக்கும் வகையில் மிரட்டல் தபால் கார்டு அனுப்பிய நபரின் அடையாளத்தை கண்டறிய தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
பொதுவாக மிரட்டல் கடிதத்தில் அனுப்புபவர்களின் பெயரோ அல்லது அமைப்பின் பெயரோ குறிப்பிடப்பட்டு இருக்காது. ஆனால் இந்த கடிதத்தில் அமைப்பின் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது.
எனவே யாரையாவது சிக்க வைக்கும் நோக்கத்தில் கடிதம் எழுதப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, கடிதம் எழுதிய நபரை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.
செய்தி: பி.ரஹ்மான் கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“