scorecardresearch

கோவையில் கஞ்சா பிசினஸ்: ‘கருப்பு ஆடா’க உதவிய ஈரோடு சைபர் கிரைம் எஸ்.ஐ கைது

சந்திரபாபுவை விசாரித்தபோது மகேந்திரன் கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக, கஞ்சா வியாபாரிகளிடம் அலைபேசியில் பேசியது தெரியவந்தது.

Coimbatore
Coimbatore

கோவையில் கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக செயல்பட்ட  காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை சங்கனூர் மேம்பாலம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரத்தினபுரி காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக டூவிலரில் வந்தவரைப் பிடித்து விசாரித்தனர், அவர் வந்த வாகனத்தைச் சோதனை செய்த போது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

பின்னர் அவரிடமிருந்து போலீசார் 8 கிலோ 200 கிராம் கஞ்சா, டூவிலர், ரூ.42,400 ரொக்கம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் காரமடையைச் சேர்ந்த சந்திரபாபு என்பதும் வெள்ளலூரில் அறை ஒன்றை எடுத்துத் தங்கி ஆந்திராவிலிருந்து சட்டவிரோதமாகக் கோவைக்கு கஞ்சா கடத்தி வந்து சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் கட்டிடக் கூலித் தொழிலாளர்களுக்குச் சிறு பொட்டலங்களாகவும் சந்திரபாபு கஞ்சாவை விற்று வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் சந்திரபாபுவின் கூட்டாளிகள் குறித்து  போலீசார் தேடினர். இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் மகேந்திரன், மாணிக்கம், மகேஷ் உள்ளிட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகேந்திரன்

கைதானவர்களில் மகேந்திரன் முன்னதாக ரத்தினபுரி காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி இருப்பதும், தற்போது ஈரோடு சைபர் கிரைமில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இதுகுறித்து சந்திரபாபுவை விசாரித்தபோது மகேந்திரன் கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக, கஞ்சா வியாபாரிகளிடம் அலைபேசியில் பேசியது தெரியவந்தது.

அதனடிப்படையில் ஈரோடு சென்ற தனிப்படை போலீசார், மகேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஜலில், பாண்டி, ரியாஸ்கான், முருகன், சிவா, முருகேசன், பாண்டி உள்ளிட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கஞ்சா புழக்கத்தைத் தடுக்க வேண்டிய காவல் துறையைச் சேர்ந்த அதிகாரியே கஞ்சா விற்க உடந்தையாக இருந்து கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Coimbatore cop held ganja sale

Best of Express