கோவை மாநகராட்சி துடியலூர் பகுதி 3-வது வார்டில் ஒப்பந்த பணியாளராக மணி (எ) அவிநாசியப்பன் பணியாற்றி வந்துள்ளார். இவர் பூச்சி கொல்லி மருந்து தெளிப்பு மேற்பார்வையாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று துடியலூர் பகுதியில் பணிகளை முடித்துவிட்டு சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள அரசு அலுவலகத்திற்கு அவரது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது நிலைத்தடுமாறி கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இந்நிலையில், ஒப்பந்த பணியாளர் மணி உயிரிழந்து தற்போது வரையும் மாநகராட்சியில் இருந்தோ அல்லது அவர் பணிபுரியும் ஒப்பந்த அலுவலகத்தில் இருந்தோ எந்த அதிகாரிகளும் வந்து பார்க்கவில்லை என்றும், அவருக்கான காப்பீட்டு திட்டம் குறித்தும் எதுவும் கூறவில்லை என்று கூறியும் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கிருந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளை அழைத்து வர கூறியிருக்கிறோம் என்று கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.