கோவையில் சாலைகளின் நடுவே மணல் குவியல் குவியலாய் குவிந்து கிடப்பதால் புழுதிக் காற்றில் மக்கள் தவித்து வருகின்றனர். கோவை மாநகராட்சியில் 2,000 கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமான சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலைகளில் பலவற்று பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்டுள்ளன. தோண்டப்பட்ட சாலைகள் தற்காலிகமாக மண் கொண்டு மூடப்பட்டன.
குண்டும் குழியுமான சாலைகளில் மக்கள் வாகனங்களை ஓட்டி இடுப்பு வலியை இனாமாக வாங்கி வந்தது தான் மிச்சம். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு சாலைகள் பேச் ஒர்க் செய்தும் புதிய தார் சாலைகள் அமைத்தும் மேம்படுத்தப்பட்டன. ஆனால் இப்போது மற்றொரு பிரச்சனை எழுந்துள்ளது.
சாலைகளின் ஓரங்களிலும், சென்டர் மீடியன் கற்களுக்கு அருகிலும் சேரும் மண் குவியல்கள் அகற்றப்படாமல் இருப்பதால் புழுதி காற்றில் கோவை மக்கள் பரிதவித்து வருகின்றனர். இவ்வாறு சாலையோரம் தேங்கும் குப்பைகள் மற்றும் மண் குவியல்களை அகற்ற கடந்த மார்ச் மாதம் கோவை மாநகராட்சிக்கு 2 தானியங்கி வாகனங்கள் வாங்கப்பட்டன.
ஆனால் அந்த வாகனங்கள் முறையாக செயல்படாத காரணத்தால் தற்போது மணல் குவியல்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்த மணல் பரப்பின் மீது அறியாமல் வாகனங்களை ஓட்டும் வாகன ஓட்டிகள் சறுக்கி விழுவதும், புழுதிக்காற்று கண்ணில் விழுவதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இந்த பிரச்சனையில் மாநகராட்சி முனைப்பு காட்டி விரைந்து சாலைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்று கோவை மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“