scorecardresearch

கோவையில் வரி செலுத்தாத 15 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

கோவை மாநகராட்சிக்கு வரி செலுத்தாமல் நீண்ட காலமாக நிலுவை வைத்துள்ள கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கோவையில் வரி செலுத்தாத 15 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

கோவை மாநகராட்சிக்கு நீண்ட காலமாக வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் வரி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்களும் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டன. அந்த முகாம்களைப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனடியாக செலுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது வரி செலுத்தாத கடைகள், வணிக வளாகங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள சேரன் டவர் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் 88 கடைகள் மாநகராட்சிக்கு வரி செலுத்தாமல் 98 லட்சம் ரூபாய் வரி நிலுவை வைத்திருந்ததால் மாநகராட்சி ஆணையர் பிரதாப் உத்தரவின் பேரில் மத்திய மண்டல உதவி ஆணையாளர் மகேஷ் கனகராஜ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட மாநகராட்சி அலுவலர்கள் அக்கடைகளுக்கு சீல் வைத்தனர்.

நேற்று (பிப்.21) மாலை மாநகராட்சி அதிகாரிகள் 18 கடைகளுக்கு சீல் வைக்க சென்ற நிலையில் அதில் 3 கடைகளின் உரிமையாளர்கள் கடைசி நேரத்தில் வரி செலுத்தியதால் 15 கடைகளுக்கு மட்டும் சீல் வைக்கப்பட்டது. மேலும் வரி பாக்கி வைத்துள்ள கடைகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கச் சென்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Coimbatore corporation seals 15 shops of tax defaulters