Coimbatore: தமிழகத்தில் கோடை கால வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இயல்பைவிட 9 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த வெயில் காலத்தில் மக்கள் பாதுகாப்பாக இருந்திட அரசு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
இந்நிலையில், அதிகரித்து கோடை வெயிலில் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க புதுச்சேரி பொதுப்பணித்துறை நிர்வாகம் எஸ்.வி. பட்டேல் சாலையில் உள்ள அதிதி சிக்னலில் தற்காலிக பச்சை நிற மேற்கூரையை அமைத்துள்ளது. சிக்னலுக்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகள் வெயிலில் அவதிப்படாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல், தமிழகத்தில் திருச்சியில் சிக்னலில் தற்காலிக பச்சை நிற மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 100 மீட்டருக்கு 1 சிக்னல் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிக்னலில் நிற்க முடியாமல் தவித்து வந்தனர். சிக்னலில் தவிக்கும் வாகன ஓட்டிகளின் சிரமத்தை தவிர்க்க காவல் துறை சார்பில் தற்காலிக பச்சை நிற மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பட்டால் சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தற்போது கோவை நகரின் முக்கிய இடங்களில் மாநகராட்சி சார்பில் தற்காலிக பச்சை நிற மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் கோவை மாநகராட்சியில் டிராபிக் சிக்னல்கள், பொது இடங்கள் மற்றும் பஸ் நிறுத்தங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மேற்கூரைகள் வெயிலின் தாக்கத்தை குறைத்து, மக்களின் பயணத்தை இன்னும் இளைப்பாற செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, கடும் வெயிலில் வாகன ஓட்டிகள் செல்லும் போது கோவை மாநகர பகுதியான கவுண்டம்பாளையம் டிராபிக் சிக்னலில் நிற்கும்போது, லேசாக இளைப்பாற வசதியாக தற்காலிக பச்சை நிற வலைகள் கொண்டு மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
இதே மாதிரியான பச்சை நிற மேற்கூரைகளை டிராபிக் சிக்னல்கள் உள்பட கோவை மாநகரின் வெவ்வேறு பகுதிகளில் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டத்தை கோவை மாநகர காவல் துறையுடன் இணைந்து மாநகராட்சி முன்னெடுக்க உள்ளது. இதை எப்படி திட்டமிட்ட இடங்களில் சரியாக செய்வது என காவல் துறையுடன் விரைவில் ஆலோசித்து, ஒப்புதல் பெற்று மாநகராட்சி தரப்பில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரியவருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“