கோவை மதுக்கரை அருகே திருமலையாம்பாளையம், பாலத்துறை, நாச்சிபாளையம், மதுக்கரை மார்க்கெட், கும்மிட்டிபதி இதனை சுற்றி பல கிராமங்கள் உள்ளன. இங்கு காந்திபுரத்தில் இருந்து அரசு பேருந்துகள் இயங்கி வந்தன.
இந்நிலையில் இந்த ஊர்களுக்கு கடந்த சில நாட்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்தும், முறையாக பேருந்து நிறுத்தத்தில் நிற்காமலும் சரிவர பேருந்துகளை இயக்காமலும் போக்குவரத்து நிர்வாகத்தினர் நடந்து கொண்டுள்ளனர்.
இதனால் அப்பகுதி பள்ளி மாணவ - மாணவிகள், அலுவலகங்கள் செல்லும் பணியாளர்கள் மற்றும் கூலி பணிக்கு செல்லும் ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவதாகவும், இது குறித்து அப்பகுதி தி.மு.க உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை போக்குவரத்து கழகத்திற்கு மனு அளித்தும் கண்டுகொள்ளாமல் அலட்சியப் போக்கில் இருந்ததாகவும் அப்பகுதி பொதுமக்கள் கூறினர். இந்நிலையில், இன்று (மார்ச் 2) காலை 7.30 மணிக்கு அங்கு வந்த அரசு பேருந்துகளை சிறை பிடித்து தி.மு.க உறுப்பினர் உட்பட பகுதி பொதுமக்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“