நடிகர் விஜய் சேதுபதியை தாக்கினால் ரூ. 1,0001 பரிசு என்று சமூக வலைதளத்தில் பதிவிட்ட, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு ரூ. 4,000 அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றி நடிகர் விஜய் சேதுபதி தவறாகப் பேசியதாக இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். அந்த பதிவில், நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரூ.1,001 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அர்ஜுன் சம்பத்தின் இந்த பதிவு, விஜய் சேதுபதி ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி கொந்தளிப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.
நடிகர் விஜய் சேதுபதியைத் தாக்கினால் ரூ.1,001 பரிசு என அறிவித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மீது கோவை கடைவீதி காவல் நிலைய ஆய்வாளர் கே.பி. சாந்தி தாமாக முன்வந்து 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கில், கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சந்தோஷ் முன்பு, விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான, அர்ஜுன் சம்பத் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அர்ஜுன் சம்பத்துக்கு ரூ. 4,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“