/indian-express-tamil/media/media_files/48gJ41rxGEuWabF8Ql1x.jpg)
கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும். பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை சரவணம்பட்டி, விநாயகபுரம், சின்னவேடம்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று (ஏப்ரல்8) காலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது மக்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை, "ஏழை மக்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளை மையப்படுத்தி கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2047-ம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக ஆக வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார். அதற்கு ஒரு பெரும்பான்மையான அரசு அமைவது அவசியமாகிறது.
இந்தி கூட்டணி கட்சியினர் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறி கிடக்கின்றனர். 2004 முதல் 2014 வரை நாடு எவ்வளவு கஷ்டப்பட்டதோ அதை மீண்டும் காண்பிக்க வேண்டும் என அவர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால், நமக்கு 400-க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும்.
கடந்த ஆண்டுகளில் கோயம்புத்தூருக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதும் எந்த வளர்ச்சியும் இல்லாமல் பின்னோக்கி கொண்டு சென்றுள்ளனர். எனவே, மோடியின் மூன்றாவது ஆட்சி காலத்தில் கோயம்புத்தூரில் விமான நிலைய விரிவாக்கம், ரயில் நிலைய மேம்பாடு, பாலங்கள் அமைத்தல், சாலைகள் அமைத்தல் போன்ற முக்கிய வளர்ச்சி பணிகள்
மேற்கொள்ளப்பட உள்ளன.
கோவையை பொறுத்தவரை சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு எந்தவித குண்டும் குழியும் இன்றி சாலையை கடக்க முடிந்தால் அது உலக சாதனையாகும். கோவையின் உள்கட்டமைப்புகள் மிக மோசமாக உள்ளது. 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் கிடைக்கிறது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சுத்தத்தில் 40, 50-வது இடத்தில் இருந்த கோயம்புத்தூர் இப்போது 176-வது இடத்திற்கு போய் உள்ளது. காரணம் வெறும் 12% குப்பைகள் மட்டுமே திட மேலாண்மைக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள குப்பையை சேமித்துக் கொண்டே வருகின்றனர்.
கோயம்புத்தூரில் இருந்து வருமானத்தை பெருக்க வேண்டும் என்பது மட்டுமே அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் நோக்கமாக உள்ளது. கோயம்புத்தூரில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டி கொடுக்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார். கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டுவதற்கு முன்பு சாலைகளை போட்டு கொடுங்கள்.
கிரிக்கெட் ஸ்டேடியம் வேண்டுமென்றால் பி.சி.சி.ஐ இடம் கேட்டு நிதி வாங்கி நாங்கள் கட்டிக் கொடுக்கிறோம். முதலில், கோயம்புத்தூரில் சரியான சாலைகளை அமைத்துக் கொடுங்கள், பஸ் நிலையம் மேம்படுத்துங்கள், குப்பையை சரியாக தரம் பிரியுங்கள். அதை விட்டுவிட்டு ரோட்டில் நடக்க தெரியாதவன் ஆகாயத்திற்கும் பூலோகத்திற்கும் குதிப்பது போல முதல்வர் பேசி வருகிறார்.
கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டுவதற்கு தான் 4000 கோடி ரூபாய் பெற்று அதில் கமிஷன் அடிக்க முடியும். எனவே இந்த முறை மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். கோயம்புத்தூர் வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும். எனவே ஏப்ரல் 19-ம் தேதி தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்" எனக் கூறி பிரச்சாரம் செய்தார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.