கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம் காந்திநகரைச் சேர்ந்தவர் சின்னசாமி மனைவி சரோஜினி. இவருக்கு வயது 82.
கணவர் இறந்த நிலையில் சரோஜினி மட்டும் தனியாக வசித்து வந்தார். இவர் அதிகாலையில் எழுந்து வாசலில் கோலமிட்டுவிட்டு வீட்டின் முன் உள்ள பால்பாட்டிலை எடுத்துச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட்: 5) மதியம் 12 மணியாகியும் பால் பாட்டில் எடுக்கப்படாமல் இருந்துள்ளது. இதைப் பார்த்த அருகில் மளிகைக்கடை வைத்திருக்கும் நபர், சந்தேகமடைத்து வீட்டினுள் சென்று பார்த்துள்ளார்.
அப்போது சரோஜினி வாய் மற்றும் கை – கால்களில் பேக்கிங் டேப் எனப்படும் பிளாஸ்திரி ஒட்டப்பட்ட நிலையில் கட்டிலருகே கிடந்துள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர் வெளியே ஓடி வந்து அருகிலிருந்தவர்களிடம் சொல்லி உள்ளே சென்று பார்த்த போது சரோஜினி உயிரிழந்தது உறுதியானது.
இது தொடர்பாக சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் காவல் ஆய்வாளர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சரோஜினி உடலைக் கைப்பற்றி தடயங்களைச் சேகரித்தனர்.

தகவலறிந்து காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து சரோஜினியின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
மூதாட்டி கை கால் மற்றும் வாயை பேக்கிங் டேப் மூலம் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“