கோவை தெற்கு பகுதியில் கார் சிலிண்டர் வெடி விபத்திற்கு பிறகு, ஒரு அசாதாரண சூழலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கார் சிலிண்டா் வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார்.
இந்நிலையில் கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத்தின் பொதுச்செயலாளர் அப்துல் ஜப்பார் புதன்கிழமை மாநகர ஆணையரை சந்தித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தவறு செயலில் ஈடுபடுபவர்களை ஒழிக்க ஐக்கிய ஜமாத் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தருவதோடு இணைந்தும் செயல்படும் என தெரிவித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியதாவது;
கோவையில் 23 ஆம் தேதி நடந்த சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணியில் 24 மணி நேரமும் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் ஜமாத் கூட்டமைப்புகளுடனான சந்திப்பில், இதுபோன்ற சம்பவங்கள் குறித்து காவலர்களுக்கு தகவல் தெரிவிப்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அதற்கான வலிமையான அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை பொருத்தவரை உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்துள்ளது. மேலும் அந்த பகுதியில் 200 மீட்டர் தொலைவில் காவல்துறை தடுப்பு இருந்ததால்தான் வாகனம் வேறு இடத்தில் வெடித்துள்ளது என தகவல் தெரியவருகிறது.
தீபாவளியை ஒட்டி அதிக பாதுகாப்பு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கை, தேசிய பாதுகாப்பு முகமை எடுத்துக் கொள்வது குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவை தற்போது அமைதியான பகுதியாகவே உள்ளது. சூழல்களை கருத்தில் கொண்டு போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்' என மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“