scorecardresearch

கோவை சிலிண்டர் வெடிப்பு : திருச்சியில் பல இடங்களில் போலீசார் தீவிர விசாரணை

தடயவியல் நிபுணர்கள், சைபர் கிரைம் போலீசார் என, 25-க்கும் மேற்பட்டோர் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.

கோவை சிலிண்டர் வெடிப்பு : திருச்சியில் பல இடங்களில் போலீசார் தீவிர விசாரணை

க.சண்முகவடிவேல்

கோவை சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் இந்த வழக்கு தொடர்பாக தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) விசாரணை வளையத்திற்குள் உள்ள நபர்களுக்கு தொடர்புடைய இடங்களில், தமிழக காவல்துறையினர் முன்கூட்டியே விசாரணை நடத்துவதுடன், அந்த இடங்களில் திடீர் சோதனையும் நடத்தி வருகின்றனர்.

அதன் அடிப்படையில், திருச்சி விமான நிலையம் அருகே வயர்லெஸ் சாலை ஸ்டார் நகரில் வசிக்கும் அப்துல் முத்தலிப் என்பவர் வீட்டில், திருச்சி கே.கே. நகர் சரக உதவி ஆணையர் சுரேஷ்குமார், கண்டோன்மென்ட் உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையிலான போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்புடைய அவரது வீட்டில் வெடிப் பொருட்கள் ஏதும் இருக்கின்றனவா? என்பது குறித்து, மோப்பநாய் ரூபி உதவியுடன், வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழக்கச் செய்யும் போலீசார் சோதனை செய்தனர். மேலும் தடயவியல் நிபுணர்கள், சைபர் கிரைம் போலீசார் என, 25-க்கும் மேற்பட்டோர் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் முடிவில், நான்கு சிம்கார்டுகள், ஒரு செல்போன் ஆகியவற்றை அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். அப்துல் முத்தலீப்பிடம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இதேபோல்  திருச்சி கண்டோன்மென்ட் உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையில் எடமலைப்பட்டி புதூரில் வசிக்கும் ஜீபைர் அகமது  வீட்டிலும் சோதனை நடைபெற்று உள்ளது.

இவரது வீட்டில் ஏதும் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் எதுவும் உள்ளதா என்று சோதனை செய்தனர். இன்று காலை ஜூபைர் அஹமது மதுரை மெயின் ரோடு எடமலைப்பட்டி புதூரில் தனியாக ரூம் எடுத்து தங்கியிருந்த நிலையில், அங்கு சோதனை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இந்த சோதனையில் சந்தேகத்திற்கு இடமான எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சீனிவாச நகர் கிழக்கு எடமலை பட்டி புதூரில் சோதனை செய்ததில் எந்த பொருளும் கைப்பற்றவில்லை. இவர்கள் 2019 ஆம் ஆண்டு NIA விசாரிக்கப்பட்ட ஷர்புதுனின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Coimbatore cylinder blast police rain in many place in trichy