/indian-express-tamil/media/media_files/2025/06/10/BtXhpXsHgtB1sjMnhUEM.jpg)
Coimbatore cylinder blast
கோவை, சிங்காநல்லூர் அருகே நீலி கோணாம்பாளையம் பகுதி இன்று மாலை பெரும் பரபரப்பை சந்தித்தது. கோவை விமான நிலையத்தில் பணிபுரியும் மாணிக்கராஜ் என்பவரது மூன்று மாடிகள் கொண்ட சொந்த வீட்டில் மின் கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மாணிக்கராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்த நிலையில், இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் அரங்கேறியது.
இரண்டாவது மாடியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ மளமளவெனப் பரவி, வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. அப்பகுதியைச் சேர்ந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சிங்காநல்லூர் காவல் நிலையம் மற்றும் பீளமேடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
கோவை சிங்காநல்லூர், நீலி கோணாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்து, சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது. வீட்டிலிருந்த குடும்பத்தினர் கோவை விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், வெளியே சென்றிருந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. https://t.co/TZ7sGr10td
— Indian Express Tamil (@IeTamil) June 10, 2025
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே, தீயின் கோரத்தாண்டவம் உச்சத்தை அடைந்தது. திடீரென, வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த பெரும் வெடி சத்தம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி, அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தீ மேலும் பரவாமல் தடுத்து, கடுமையாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். வீட்டில் யாரும் இல்லாததால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது.
மின் கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து பீளமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.