கோவை மாவட்டத்தில் டவுன் காஜி நியமனம் தொடர்பாக மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படும் இந்த முக்கிய பதவிக்கு, அண்மையில் நடைபெற்ற நியமனக் குழுவின் ஆலோசனை உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறியுள்ளதாக உருது மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தக்னி முஸ்லிம் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்கள் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டக்கோரி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஆயிரக்கணக்கானோர் மனு அளித்துள்ளனர்.
மாமன்னர் ஹைதர் அலி காலம் தொட்டே உருது மொழியைப் பேசும் தக்னி முஸ்லிம்களே டவுன் காஜி பதவியில் இருந்து வருகின்றனர். இது தங்கள் சமூகத்தின் ஒரு பாரம்பரிய உரிமை என்றும், தற்போது இந்த நியமனம் அந்த உரிமையைப் பறிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தக்னி சமூகத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
கல்வித் தகுதி மற்றும் அனுபவம் கொண்ட ஒருவரை நியமிப்பதற்குப் பதிலாக, அரசியல் மற்றும் சில அமைப்புகளின் பரிந்துரையின் அடிப்படையில் நியமனம் நடைபெறுவது கண்டிக்கத்தக்கது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது தகுதி வாய்ந்தவர்களைப் புறக்கணிப்பதாக அமையும் என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த அநீதிக்கு எதிராக தக்னி முஸ்லிம் சமூகத்தினர் ஒருமித்த குரலில் கண்டனம் தெரிவித்துள்ளனர். தங்கள் உரிமைகளுக்கு எதிராக டவுன் காஜி நியமிக்கப்படும் பட்சத்தில், ஒட்டுமொத்தமாக வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அவர்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, உரிமைகளுக்கு மாற்றாக டவுன் காஜி நியமிக்கப்பட்டால், கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இல்லம்தோறும் கருப்புக் கொடி கட்டி தொடர் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், உண்ணாவிரதம் உள்ளிட்ட அறவழிப் போராட்டங்களை நடத்த உள்ளதாக தக்னி சுன்னத் ஜமாத் நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.
கோவை மாவட்ட அனைத்து தக்னி ஜமாத் கூட்டமைப்பு சார்பாக நாகமொஹல்லாஹ் தக்னி அஹ்லே சுன்னத் ஜமாத் தலைவர் ஜனாப். அப்துல் நயீம் மற்றும் ஹைதர் அலி திப்புசுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் முன்னாள் தலைவர் ஜனாப். அஹமத் பாஷா உள்ளிட்ட பல நிர்வாகிகள், மொஹல்லாஹ் பொதுமக்கள் சகிதம் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.