Advertisment

நில மோசடி: தற்கொலைக்கு முயன்ற புகார்தாரர்; மறுப்பு கூறிய கோவை பா.ஜ.க மாஜி மா.செ

நில மோசடி தொடர்பாக புகார் அளிக்க வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுதாரர்களில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

author-image
WebDesk
New Update
Coimbatore dist former BJP sec Balaji Uthamaramasamy refuses Land grabbing complaints Tamil News

நில மோசடி தொடர்பாக காளிகோனார் வாரிசுதாரர்கள் புகாருக்கு பா.ஜ.க முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மறுப்பு தெரிவித்தார்.

நில மோசடி தொடர்பாக பா.ஜ.க முன்னாள் மாவட்ட தலைவர், ரியல் எஸ்டேட் நிறுவனர் மற்றும் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆகிய மூவர் மீது புகார் அளிக்க வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுதாரர்களில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

Advertisment

கோவை கீரணத்தம் பகுதியில் காளிகோனார் என்பவருக்கு சொந்தமான 7.9 ஏக்கர் நிலம் உள்ளது. அவரது வாரிசுதாரர்கள் 30 பேர் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வருகின்றனர்.  

புகார்

இந்நிலையில், காளிகோனாருக்கு சொந்தமான அந்த இடத்தை சிங்காநல்லூர் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர் ஜெயராம், பா.ஜ.க முன்னாள் கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, ஸ்ரீவாரி தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனர் பகவான் தாஸ் ஆகியோர் மோசடி செய்து விற்று வருவதாக கூறி சில தினங்களுக்கு முன்பு கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். 

இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் அந்த நிலத்தை விற்று வருவதாகவும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தங்கள் புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காளி கோனாரின் வாரிசுதாரர்கள் திரண்டு புகார் மனு அளிக்க வந்தனர். 

அப்போது வாரிசுதாரரான ஒரு பெண் அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், காவல்துறையினர் அவரை தடுத்து அவர் மீது தண்ணீர் ஊற்றி சமாதானப்படுத்தினர். இது குறித்து பேசிய அவர்கள், உடனடியாக மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களை அவர்கள் மிரட்டுவதாகவும், நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை நிலம் சம்பந்தமாக எந்த ஒரு செயலிலும் ஈடுபடாத வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

இதனிடையே மாவட்ட ஆட்சியருக்கு தமிழ் தெரியுமா என கேள்வி எழுப்பிய அவர்கள் இந்தியில் சத்தமாக அவர்களது கோரிக்கையை முன்வைத்தனர். மேலும், அ.தி.மு.க எம்.எல்.ஏ கே.ஆர் ஜெயராம் பா.ஜ.க முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி அனைவரையும் திருடர்கள் என சாடிய அவர்கள் தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

மறுப்பு 

இந்த நிலையில், நில மோசடி தொடர்பாக காளிகோனார் வாரிசுதாரர்கள் புகாருக்கு பா.ஜ.க முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மறுப்பு தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அந்த புகார்தாரர்கள் அபாண்டமாக பொய் கூறுகிறார்கள். கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்த போதே, எங்களது பெயரை கெடுக்க பார்க்கிறார்கள் என காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தோம். இது சம்பந்தமாக போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

எனக்கும் அந்த இடத்திற்குன் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த இடம் எங்குள்ளது என்று கூட எனக்கு தெரியாது. அந்த மனுவை பார்த்து தான் கீரணத்தம் பகுதியில் அந்த இடம் இருப்பது தெரியவந்தது. அந்த ஸ்ரீவாரி ப்ரமோட்டர்ஸ் அலுவலகத்திற்கு ஒரு நாள் மட்டுமே சென்றுள்ளேன். அதுவும் இது சம்பந்தமாக பேசவில்லை. 

இந்த குற்றச்சாட்டு அரசியல் பின்புலமாகவோ அல்லது தொழில் போட்டியாகவோ இருக்கலாம். அவர்கள் பாலாஜி உத்தம ராமசாமி என்று கூறி உத்தமரா என்று எனது தந்தையின் பெயரை குறிப்பிட்டு அவமதிக்கும் விதத்தில்பேசியுள்ளனர். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்.  

30 வருடங்களாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். என் மீது இதுவரை எந்த வழக்கும் இல்லை. அவர்களுடன் நேருக்கு நேர் உட்கார்ந்து பேசுவதற்கும் தயார்.  பொய்யான குற்றச்சாட்டை அவர்கள் முன்வைக்கிறார்கள். நானும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வும் முன்னாள் பார்ட்னர்கள். இருவரும் சேர்ந்து தொழில் செய்து 7 ஆண்டுகள் ஆகிறது" என்றும் அவர் கூறினார். 

 செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Bjp Aiadmk Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment