/indian-express-tamil/media/media_files/2025/10/18/coimbatore-diwali-shopping-2025-10-18-21-12-11.jpg)
தீபாவளி ஷாப்பிங்: கோவை கடைவீதிகளில் மக்கள் வெள்ளம்; போலீஸ் தீவிர கண்காணிப்பு!
நாளை மறுநாள் (அக். 20) நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், புத்தாடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க கோவை கடை வீதிகளில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது. கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளியை முன்னிட்டு, கோவையில் உள்ள ஒப்பணக்கார வீதி, கிராஸ் கட் சாலை, 100 அடி சாலை, பெரிய கடை வீதி உள்ளிட்ட வணிகப் பகுதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். இதன் காரணமாக இந்த சாலைகள் மக்கள் வெள்ளமாகக் காட்சியளித்தன. புத்தாடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை சூடுபிடித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
பொதுமக்கள் கூட்டம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் நெருக்கடியான சாலைகளைச் சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக, பெரிய கடை வீதி மற்றும் ஒப்பணக்கார வீதி போன்ற இடங்களில் சிறு வியாபாரிகள் நடைபாதைகளில் கடைகள் அமைத்திருந்தனர். ஆனால், ஒரு சிலர் தள்ளுவண்டிக் கடைகளைச் சாலையின் நடுவே நிறுத்தி வியாபாரம் செய்ததால், போக்குவரத்து நெரிசல் உச்சத்தை அடைந்தது. ஒப்பணக்கார வீதியில் வாகனங்கள் மிக மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
காவல்துறையின் தீவிர கண்காணிப்பு
பொதுமக்கள் கூட்டத்தைப் பயன்படுத்தி திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காகக் காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். ஒப்பணக்கார வீதி, பெரிய கடை வீதி மற்றும் காந்திபுரம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் காவல்துறையினர் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைத்துத் திருட்டுச் சம்பவங்களைத் தடுத்தனர். திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களைக் கண்டறியத் தனிப்படை போலீசார் சாதாரண உடையில் கூட்டத்திற்குள் சென்று கண்காணித்தனர்.
ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு
கோவை பெரிய கடை வீதியில், காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கினர். முன் பின் தெரியாத நபர்கள் தரும் உணவுப் பொருட்களைச் சாப்பிடக் கூடாது. கவனத்தைத் திசை திருப்பித் திருட்டில் ஈடுபடும் நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். பணம், நகைகள் ஆகியவற்றைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்லுமாறும், கூட்ட நெரிசலில் குழந்தைகளின் கைகளை பிடித்துக்கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தினர். கடும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us