கோவை மாநகராட்சியில் 34-வது வார்டு தி.மு.க மாமன்ற உறுப்பினராகவும், கல்விக் குழுவின் தலைவராகவும் இருப்பவர் மாலதி. இவர் கவுண்டம்பாளையம் பி.என்.டி காலனியில் உள்ள
ராஜன் நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவரது வீட்டிலிருந்து சுமார் 10 வீடு தள்ளி வசித்து வரும் சுபாஷிற்கும் இவருக்கும் வீட்டின் முன்பாக கார் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. மாலதியின் கார் நிறுத்துவதற்கு மரக்கன்று இடையூறாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாலதியின் காரில் இரவு நேரத்தில் யாரோ கீறல் போட்டுள்ளதாகவும் மாலதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதன் காரணமாக, மாலதிக்கும் சுபாஷுக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மாலதி மரக்கன்றை அப்புறப்படுத்த தெரிவித்துள்ளார். ஆனால் சுபாஷ் மறுத்ததையடுத்து ஆவேசமடைந்த மாலதி அங்கிருந்த மரக்கன்றை பிடுங்கி வீசியுள்ளார். மேலும் இது தொடர்பாக யாரிடம் வேண்டுமானாலும் புகார் தெரிவித்துக் கொள், யாரை வேண்டுமானாலும் அழைத்து வா என மாலதி கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் வீடியோ
இதனை வீடியோவாக பதிவு செய்த சுபாஷ் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ வேகமாக பரவியது. இதையடுத்து மாலதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், "நான் மரக்கன்றை பிடுங்குவது போன்ற வீடியோ மட்டும் வெளியாகி உள்ளது. ஆனால் அதற்கு முன்பு என்ன நடந்தது? என்பதை தெளிவுபடுத்த உள்ளேன்.
நாங்கள் வசித்து வரும் பகுதியின் சாலை மொத்தமாகவே 13 அடி தான். அதுமட்டுமல்லாமல் அந்தப் பகுதியில் பாதாள சாக்கடை வேலை நடந்து வருகிறது. நாங்கள் முன்பே அங்குதான் கார் நிறுத்தி வருகிறோம். இதனால் அங்கிருப்பவர்கள் பிரச்சனை செய்து வருகின்றனர். அவர்கள் சாலையிலேயே ஆட்டுக்கல், அம்மிக்கல், அடுப்பு, மரம் உள்ளிட்டவைகளை வைக்கின்றனர். இதை அப்புறப்படுத்த மாநகராட்சி ஆணையாளரும் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வழியில் இருந்த 2 சிறிய மரத்தையும் மாநகராட்சி அகற்றி விட்டது.
மதம் போல் மர அரசியல்
ஆனால் அகற்றிய 1 மணி நேரத்தில் மீண்டும் 4 மரங்களை அங்கு வைத்தனர். இதை அங்குள்ள பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி இளைஞர்கள் செய்துள்ளனர். அதேபோல் நேற்று நான் காரை நிறுத்தும் பொழுது, காரை நிறுத்தினால் பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவதாக தெரிவித்தனர். இது தொடர்பாக புகார் அளித்துள்ளேன். இந்த நிலையில் நேற்று காலை நான் தூங்கி எழுந்து வந்து பார்த்த பொழுது காரை ஆணியால் கீறி உள்ளனர். இதை நான் கேட்ட பொழுது என்னை ஆபாசமாக கெட்ட வார்த்தையில் திட்டினர். பா.ஜ.க-வினர் இதை அரசியல் செய்ய பார்க்கின்றனர்.
நாங்கள் மாநகராட்சி உத்தரவின் பேரில் 4 மரங்களை அகற்றி திரும்ப 40 மரங்கள் வைக்க உள்ளோம். பா.ஜ.க மதங்களைப் போல் மரங்களை வைத்து அரசியல் செய்கிறது" என்று கூறினார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil