Coimbatore | Lok Sabha Election 2024 | Dmk: கோவையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று காலை முதல் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவை பி.என்.புதூரில் உள்ள வாக்குச்சாவடி அருகே 200 மீட்டருக்கு அப்பால் தி.மு.க உள்ளிட்ட கட்சியினர் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் தங்களது கட்சி சின்னத்தை வைத்திருந்தனர்.
இது தேர்தல் விதிமுறை மீறல் என்பதால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை எச்சரித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் கட்சி சின்னத்தை மறைத்து வைத்தனர். தொடர்ந்து அங்கு போடப்பட்டிருந்த பந்தலை அகற்றுமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதில் அங்கு இருந்த உதவி கமிஷனர் நவீன் குமாருக்கும் - தி.மு.க பகுதி செயலாளர் பாக்யராஜ் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, உதவி கமிஷனர் நவீன் குமார் தி.மு.க பகுதி செயலாளர் பாக்யராஜை தாக்கியதாக தெரிகிறது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த தகவல் அறிந்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“