கோவை மருதமலை முருகன் கோவிலில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வழிபாடு செய்த பின்னர் தேர்தல் பரப்புரையை துவக்கினார். அப்பகுதியில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கிய அவர், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
பின்னர் பந்தயசாலை பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து கணபதி ராஜ்குமார், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடியிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
அப்போது தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், “திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட நான் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளேன். முதலமைச்சர் செய்துள்ள திட்டங்கள் மற்றும் சாதனைகளை எடுத்து சொல்லி வாக்குகளை சேகரிப்போம்.
தேர்தல் களம் எங்களுக்கு சாதகமாக உள்ளது. 10 வருடங்களாக ஆட்சியில் உள்ளவர்கள் எதுவும் செய்யவில்லை. லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன், எனத் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய அமைச்சர் டிஆர்பி ராஜா, எதிர்கட்சியில் உள்ள சில பேர் சொல்வதை மக்கள் காது கொடுத்து கேட்பதில்லை. நீங்கள் மட்டும் ஏன் கேட்கிறீர்கள்? ஆட்டுக் குட்டியை நான் கையில் எடுக்கவில்லை. அதை சமைக்கப் போகிறேன். என்னை ஈசல் பூச்சி என அண்ணாமலை சொன்னது சந்தோசம். ஏன் அவருக்கு அவ்வளவு உறுத்துகிறது எனத் தெரியவில்லை.
என் தலைவர் கலைஞர் மதித்த வாஜ்பாய் வாஜ்பாய் போன்ற மகத்தான தலைவர்கள் இருந்த இயக்கம். அந்த இயக்கத்தில் இருந்து வந்து விட்டு, அந்த இயக்கத்தையே ஒட்டுமொத்தமாக புதைத்து விட்டு மிகவும் கொச்சையாக அரசியலை தமிழகத்திற்கு சில பேர் கொண்டு வந்து சேர்த்து இருக்கிறார்கள்.
அவர் குறித்து நான் பேசுவது அவசியமற்றது.
ஆனால் தமிழகத்தில் ஜனநாயகம் செழித்தோங்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் முதலமைச்சர் வேலை செய்து வருகிறார். தேர்தல் காலத்தில் எதிரணியினர் மாற்றி மாற்றி சொல்வார்கள். அதனால் சூடு பறக்கும். ஆனால் தரத்தை மீண்டும் மீண்டும் எதிரணியினர் குறைத்து கொண்டே இருக்கக் கூடாது.
அதிமுகவினர் ஒரளவு சரியாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு சில பேர் கட்சியை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவது அந்த கட்சியினருக்கே பிடிக்கவில்லை.
தமிழகம் ஜனநாயம் மற்றும் நாகரீக அரசியலுக்கு பெயர் போன மாநிலமாக திகழ்கிறது. எல்லோரும் சேர்ந்து ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பாடுபடும் அனைவரும் இந்தியா கூட்டணியில் இருக்கிறார்கள். இந்த நாடும், இனமும் முன்னேறக்கூடாது, அழிய வேண்டும் என நினைத்துக் கொண்டிருப்பவர்கள் மறுபக்கம் இருக்கிறார்கள்.
கீழ்தரமான அரசியலை ஒரங்கட்டி விட்டு வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும். பத்து ஆண்டுகளில் அவர்கள் எதுவும் செய்யவில்லை. இந்த இரண்டரை ஆண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியில் தான் தமிழகம் செழித்தோங்கி, பளபளவென மின்னுகிறது.
இந்தியாவின் நெம்பர் 1 மாநிலமாக விளங்குகிறது. மாநிலத்திலும், ஒன்றியத்திலும் இந்தியா கூட்டணி ஆட்சி அமையும் சூழல் வந்திருக்கிறது. மகத்தான வளர்ச்சி தமிழகத்திற்கு காத்திருக்கிறது. கோவைக்கு அடுத்த 6 மாதங்களில் மகத்தான வளர்ச்சி வரப்போகிறது. அடுத்த கட்டமாக சிறப்பான வளர்ச்சி காத்திருக்கிறது.
கோவையை பொருத்தவரை மெட்ரோ ரயில், டெக்ஸ் சிட்டி, விமான நிலைய விரிவாக்கம் என அதிமுக கிடப்பில் போட்டது அனைத்தையும் செய்தது திமுக தான் எனத் தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
”தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.