New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/21/whatsapp-image-2025-07-21-16-51-48.jpeg)
Coimbatore
தான் தவெகவில் இருந்து விலகி தி.மு.கவில் இணைந்த பிறகு, சமூக வலைதளங்களில் தன்னை அவதூறாகவும் ஆபாசமாகவும் விமர்சிப்பதாகவும், தனது புகைப்படங்களை மார்ஃபிங் செய்து பரப்புவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Coimbatore
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை இடையார்பாளையம், பாலாஜி நகர், லட்சுமிபுரம் 4வது குறிப்பில் வசிக்கும் வைஷ்ணவி (20) என்ற இளம் பெண், தமிழக வெற்றி கழகத்தினர் மீது புகார் மனு அளித்தார். மக்கள் பணி செய்ய முன்வரும் இளம்பெண்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
வைஷ்ணவி தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது: "நான் தமிழக வெற்றி கழகம் கட்சியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உறுப்பினராக இணைந்து மக்கள் பணியை செய்து வந்தேன். சமூக வலைதளங்களிலும் கட்சியின் கொள்கைகளை பரப்பி வந்தேன். அதன் பிறகு, கடந்த மே மாதம் 3ஆம் தேதி, கொள்கை வேறுபாடுகளாலும், மக்கள் பணி செய்ய நிர்வாகிகள் தடுத்ததாலும் அக்கட்சியில் இருந்து விலகினேன்.
இந்த நிலையில், கடந்த ஜூன் 22ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். சமூக வலைதளங்களில் மக்கள் நலன் கருதி என்னுடைய கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறேன். ஆனால், கடந்த மூன்று மாதங்களாக, தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் என்னைப் பற்றி அவதூறாகவும், ஆபாச வார்த்தைகளாலும் தரக்குறைவாக விமர்சித்து வருகிறார்கள்.
மேலும், என்னுடைய புகைப்படங்களை மிக மோசமாக சித்தரித்து, மீம்களாகவும், வீடியோக்களாகவும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் என்னை போன்ற இளம் பெண்கள் அரசியலுக்கு வந்து மக்கள் பணி செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆனால், தமிழக வெற்றிக் கழக நபர்களால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.
இதை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கண்டிப்பாக கண்டிப்பார் என்று பொறுத்திருந்தேன். ஆனால், அதைப் பற்றி எந்த ஒரு வார்த்தையும் அவர் பேசவில்லை. இது என்னையும், என்னை போன்ற சிறுவயதிலேயே மக்கள் தொண்டர்களாக அரசியலில் பயணிக்கும் பெண்களையும் பாதிக்கும் செயலாக உள்ளது. இது எனக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
ஆகவே, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மீதும், அவர்கள் கட்சித் தொண்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்." என்று வைஷ்ணவி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை மாநகர காவல் துணை ஆணையர் சுகாசினியிடம் வைஷ்ணவி அளித்தார். இது குறித்து போலீசார் விசாரிப்பதாக உறுதி அளித்ததாக வைஷ்ணவி தெரிவித்தார். இந்த சம்பவம் அரசியலில் ஈடுபட விரும்பும் இளம் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.