கோவை மாவட்டத்தை பொருத்தவரை கோவை, பொள்ளாச்சி என இரண்டு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து கோவை தொகுதியில் பதிவான வாக்குகள் கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரியிலும், பொள்ளாச்சி தொகுதியில் பதிவான வாக்குகள் மகாலிங்கம் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை ஒட்டி பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் நான்கு அடுக்கு பாதுகாப்பில் மத்திய படை மற்றும் மாநில காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உள்ளே செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கோவை மக்களவைத் தொகுதி பொருத்தவரை 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும் என்றும் தபால் ஓட்டுக்கு 7 மேசைகளும் மின்னணு வாக்கு எண்ணிக்கைக்கு 94 மேசைகளும் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் 373 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் ஒவ்வொரு 3 தொகுதிக்கும் இரண்டு மேற்பார்வையாளர்கள் விதம் ஒரு மக்களவைத் தொகுதிக்கு இரண்டு அதிகாரிகள் இந்திய தேர்தல் ஆணையம் மூலமாக நியமனம் செய்யப்பட்டிருந்தது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணிக்கை தேவையான அனைத்து பொருள்களும் வாக்கு என்னும் மையங்களில் தயார் நிலையில் உள்ளன.
வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் அனைவரையும் தீவிர சோதனைக்கு பின்னரே போலீசார் அனுமதித்து வருகின்றனர்.
குறிப்பாக கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் 1500 காவலர்களும், மாநகரத்தில் 1000 காவலர்களும், பொள்ளாச்சி வாக்கு எண்ணும் மையத்தில் 1425 காவலர்களும், மாவட்டத்தில் 600 காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக கோவை நாடாளுமன்ற தொகுதியில் சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லடம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 21,06,124 வாக்காளர்கள் உள்ளனர். 26 சுயேட்சைகள் உட்பட மொத்தம் 37 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான்