கோவை, தடாகம் பகுதியையொட்டி வனப் பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன. இந்த காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகின்றன.
அவ்வாறு வரும் யானைகள் விளை நிலங்கள் மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. தடாகம் அடுத்த தாளியூர் பகுதியைச் சேர்ந்தவர் தென்னை மரம் ஏறும் தொழிலாளி நடராஜன். இவருக்கு அந்த பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது. இந்நிலையில் காட்டு யானை ஒன்று குட்டியுடன் அப்பகுதியில் புகுந்தது.
அந்த யானை உணவு தேடி அங்கும், இங்கும் சுற்றித் திரிந்தது. பின்னர் நடராஜன் வீட்டின் அருகே சென்ற காட்டு யானை வீட்டின் கதவை உடைத்தது. தொடர்ந்து உள்ளே நுழைந்த காட்டு யானை அங்கு வைக்கப்பட்டு இருந்த காய்கறிகளை உண்டது.
ஆனால் யானையால் மேற்கொண்டு வீட்டிற்குள் செல்ல முடியவில்லை. இதனால் யானை அங்கு இருந்த பொருட்கள் அனைத்தையும் தேசப்படுத்தியது. அதேபோன்று அருகில் தங்கி இருந்த பணியாளர்கள் ருக்மணி, பழனிசாமி அறையில் கதவை உடைத்து உள்ளே நுழைந்ததில் அவர்களுக்கு காலில் காயம் ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பான காட்சிகள் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகின. யானை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“