Advertisment

'பறிபோகும் தமிழகத்த்தின் நீராதாரங்கள்': கேரள அரசை கண்டித்து மாபெரும் போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

"தமிழ்நாட்டில் காவிரி, பாலாறு, சிறுவாணி, அமராவதி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் ஒவ்வொன்றாக பறிபோய் கொண்டிருக்கின்றன." என்று விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Coimbatore Farmers association leader PR Pandian announce protest against Kerala govt on building new dam Tamil News

புதிய அணை கட்டும் கேரள அரசுக்கு எதிராக கோவை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் போராட்டம் அறிவித்துள்ளார்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Advertisment

கோவை (Coimbatore) காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் தமிழக நதிநீர் உரிமைகள் குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். 

இக்கூட்டத்தில் தமிழகத்திற்கு வரும் நதிகளுக்கு இடையே பிற மாநிலங்களில் கட்டப்பட்டு வரும் அணைகளை தடுப்பது குறித்தும் அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இக்குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். 

அப்போது பி.ஆர்.பாண்டியன் (PR Pandian) பேசியதாவது:- 

தமிழ்நாட்டில் காவிரி, பாலாறு, சிறுவாணி, அமராவதி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் ஒவ்வொன்றாக பறிபோய் கொண்டிருக்கின்றன. இதனை தட்டி கேட்பதற்கு  தமிழ்நாடு அரசு தயங்குகிறது. சிறுவாணி ஆற்றிற்கு நடுவே இரண்டு ஆண்டுகளுக்குள் கேரள மாநிலம் அணை கட்டியுள்ளது. 

2015 ஆம் ஆண்டு கேரள மாநிலம் அணை கட்டுவதற்கு கர்நாடக மாநிலம் அனுமதி அளித்தது. அன்றைய நாட்களில்  விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், அந்த அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற்றது. இத்தகைய நிலையில், தி.மு.க அரசு பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் கேரள மாநிலம் அங்கு அணைகளை கட்டி சிறுவாணிக்கு தண்ணீர் வருவதை தடுத்து நிறுத்தி உள்ளது. 

அதேபோல், சிலந்தி ஆற்றில் சட்டவிரோதமாக கேரள அரசு அணை கட்டியிருக்கிறது. எந்த அரசாங்கமும் அதன் விருப்பத்திற்கு அணைகளை கட்ட முடியாது. பாசன விவசாயிகள் கருத்துக்களை கேட்காமல் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. காவிரி மேலாண்மை திட்டத்தில் அறிவுரைகளை கேட்காமல் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. நாம் பெறுகிற இடத்தில் இருக்கின்றபோது, காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்படுத்த வேண்டிய அதிகாரம் தமிழக அரசிடம் உள்ளது. 

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சட்டவிரோதமாக பிப்ரவரி மாதம் காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசின் ஒப்புதலோடு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் கூறுகிறார். அது தொடர்பாக இதுவரை தமிழக முதலமைச்சர் வாய் திறக்கவில்லை. 

அதேபோல் முல்லைப் பெரியாறுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசிற்கு கேரள அரசு விண்ணப்பம் அளித்துள்ளது. மே மாதம் அதற்காக ஒரு தனி குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இதனை நிறைவேற்றுவதற்கு சாரங்கபாணி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. 

இப்படியாக, ஒவ்வொரு நீராதாரங்களும் பறிபோகிறது. ஆனால், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாய் திறக்க மறுக்கிறார். ஒட்டுமொத்தமாக விளைநிலங்களை அழித்துவிட்டு கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதற்கு தி.மு.க அரசு கார்ப்பரேட்டுகளுடன்  கைகோர்த்து நடை போடுகிறதோ என்று தோன்றுகிறது. 

ஒவ்வொரு பாசன விவசாயிகள் விவசாய சங்க தலைவர்கள் சமூக ஆர்வலர்களைக் கொண்ட ஒத்த கருத்துடைய அமைப்புகளை ஒருங்கிணைத்து போராட்டக் குழுவை உருவாக்குவதற்கும் உரிமைகளை மீட்டெடுப்பதற்கும் முயற்சி எடுத்து வருகிறோம். 

அந்த வகையில் "கொங்கு மண்டல நீர் ஆதார உரிமை மீட்பு குழு-வை" இன்று உருவாக்கியுள்ளோம். வருகின்ற ஜூன் 13 ஆம் தேதி ஒன்பதாற்று டோல்கேட்டை கேரளா அரசுக்கு எதிராகவும் சிலந்தி ஆற்றுக்கு நடுவே அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், சிறுவாணியில் கட்டப்பட்டு இருக்கக்கூடிய அணையை உடைத்து எறிய தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவர்களும் விவசாயிகளும் ஒன்றிணைத்து முற்றுகை இடுவது என முடிவெடுத்துள்ளோம். 

அதற்கு முன்னதாக 28 ஆம் தேதி முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதை கண்டித்து மதுரை வருமானவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட உள்ளோம். நீதிமன்றம் கூறியுள்ள பல்வேறு தீர்ப்புகளை தி.மு.க அரசாங்கம் நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது, கேரளா அரசு உடன் இணைந்து பேசி,  இப்பிரச்சனைகளுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆனால் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் அந்தக் குழுவின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளது. எனவே அந்தக் குழுவில் விவசாயிகளையும் சமூக ஆர்வலர்களையும் இணைக்க வேண்டும். மேலும், இந்த வகாரத்தில் வலிமையான போராட்டங்களை முன்னெடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Coimbatore PR Pandian
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment