மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்தவர் சோனைமுத்து. கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவையில் தங்கி எல் & டி பைனான்ஸ் நிறுவனத்தில் ஏரியா மேலாளராக பணியாற்றி வரும் இவர் கடந்த ஓராண்டாக கோவை ராமநாதபுரம் ஸ்ரீபதி பகுதியில் நண்பர்களுடன் வசித்து வந்துள்ளார்.
Advertisment
முதலில் கோவை அண்ணாசிலை அருகே உள்ள கோடக் வங்கியில் பணியாற்றிய சோனைமுத்துக்கு, அதே வங்கியில் பணியாற்றி வந்த விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்துள்ளனர். இதனிடையே கடந்த ஆறு மாதங்களுக்கு முன் விஜயலட்சுமி கோவை சுகுணாபுரம் பகுதியை சேர்ந்த சல்மான் பாரிஸ் என்ற நபரை திருமணம் செய்து கொண்டு இஸ்லாமிய மதத்திற்கு மாறினார்.
மேலும் விஜயலட்சுமி என்ற தனது பெயரை ரியா பாத்திமா என்று பெயரை மாற்றிக்கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், விஜயலட்சுமி, சோனைமுத்து இரவரும் வெவ்வேறு நிறுவனத்திற்கு மாறிவிட்டனர். ஆனாலும் விஜயலட்சுமி, சோனைமுத்துவுடன் தொடர்ந்து போனில் பேசி வந்துள்ளார்.
Advertisment
Advertisements
இந்நிலையில் தனது மனைவி ரியா பாத்திமா (விஜயலட்சுமி) வேறொரு நபருடன் அடிக்கடி போனில் பேசி வருவது தெரிந்துகொண்ட அவரது கணவர் சல்மான் பாரிஸ், ரியா பாத்திமாவின் வாட்ஸ் சாட்ஸ் மற்றும் வங்கி பண பறிமாற்றங்களை பார்த்துள்ளார். அப்போது விஜயலட்சுமி சோனைமுத்துவுடன் பேசிக்கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சல்மான் பாரிஸ் சோனைமுத்துவை அழைத்து, தனியாக பேச வேண்டும் எனக்கூறி, கோவை வ.உ.சி பூங்காவிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஆனைக்கட்டியிலிருந்து தனது நண்பர்கள் அக்பர் சாதிக், முகமது அக்சர் ஆகிய இருவருடன் வ. உ .சி பூங்காவிற்கு வந்த சல்மான் பாரிஸ் கத்தியைக்காட்டி மிரட்டி தனது நண்பர்களுடன், வந்த சோனைமுத்துவை தாக்கி கேரள பதிவு எண் கொண்ட வாகனத்தில் கடத்திச்சென்றுள்ளார்.
இதனைப்பா்த்த சோனைமுத்துவின் நண்பர்கள் செய்வறியாது திகைத்து நின்றுள்ளனர். இதனிடையே காரில் கடத்தப்பட்ட சோனைமுத்துவை மூவரும் இணைந்து தாக்கியதுடன், கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர். இதனிடையே கார் பொள்ளாச்சி சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது ஆத்துப்பாலம் பகுதியில் சோனைமுத்துவை கடத்திய காரில் பெட்ரோல் இல்லாமல் நின்று போனது.
இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு சோனைமுத்து காரின் கதவை திறந்து கொண்டு வெளியில் குதித்தார். மேலும் தன்னை கடத்துவதாக சோனைமுத்து சத்தம்போட்டு கத்தியதை தொடர்ந்து அங்கு இருந்த பொதுமக்கள் அந்த சல்மான் பாரிஸ் உட்பட 3 பேரையும் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து காயமடைந்த சோனைமுத்துவை சிகிச்சைக்காக அனுமதித்த பொதுமக்கள் சம்பவம் குறித்து பந்தயச்சாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூவரையும் கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் திருமணத்திற்கு பின்னரும் தனது மனைவி ரியா பாத்திமா, தொடர்ந்து சோனைமுத்துவிடம் செல்போனில் பேசி வந்ததுடன் பணம் கொடுக்கல் வாங்கலிலும் ஈடுபட்டு வந்துள்ளதன் காரணமாக, ஆத்திரமடைந்த கணவர் தனது நண்பர்களுடன் இணைந்து சோனைமுத்துவை கடத்தி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.
இது தொடர்பாக சோனைமுத்து அளித்த புகாரின் பேரில் மூவர் மீதும் ஆபாசமாக பேசுதல், தன்னிச்சையாக காயம் ஏற்படுத்துதல், கடத்துதல், முறையற்று சிறை வைத்தல், கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் உட்பட ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil