தெலுங்கு பட இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் சன்னி தியோல் நடிப்பில் கடந்த 10-ந் தேதி ஜாட் என்ற இந்தி திரைப்படம் வெளியாகியது. இந்த திரைப்படத்தில், இலங்கை தமிழர் விடுதலை போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் ஜாட் திரைப்படத்தை திரையிடக்கூடாது என்றும், அதனை தடை செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார். இல்லையென்றால் அந்த திரைப்படம் வெளியாகும் தியேட்டர்கள் முன்பு நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் அறிவித்தார்.
இந்நிலையில், கோவை கணபதி பகுதியில் உள்ள ப்ரோசோன் மால் வணிக வளாகத்தில் "ஜாட்" திரைப்படம் திரையிடப்பட்டு உள்ளது. இதனை கேள்விப்பட்ட நாம் தமிழர் கட்சியினர் 20-க்கும் மேற்பட்டோர் நேற்றிரவு அந்த வணிக வளாகம் முன்பு கையில் பதாகைகளுடன் திரண்டனர். அவர்கள் ஜாட் திரைப்படத்தை திரையிடக்கூடாது என கூறி கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படத்தில் தமிழ் ஈழம் மற்றும் ஈழத் தமிழர்களை இழிவாக சித்தரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அத்துமீறி திரையரங்கிற்கு உள்ளே நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர்களைக் குண்டுகட்டாக இழுத்து வெளியே விட்டனர். இதனால் அவர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஆனால் அவர்கள் உள்ளே நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், இத்திரைப்படத்தை திரையிடப்பட்டால் உங்களது திரை கிழிக்கப்படும் என அப்போது நாம் தமிழர் எச்சரிக்கை விடுத்தனர்.