/indian-express-tamil/media/media_files/2025/01/03/eyv2Uw8Ob5XRfBDfxeHy.jpg)
கோவை மாவட்டத்தில், கேஸ் டேங்கர் லாரி விபத்துக்குள்ளான நிலையில் சுமார் 10 மணி நேரத்திற்கு பிறகு லாரி மீட்கப்பட்டது.
கேரள மாநிலம், கொச்சின் பகுதியில் இருந்து எல்.பி.ஜி கேஸ் ஏற்றி வந்த பாரத் டேங்கர் லாரி, கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் மீது ஏறி காந்திபுரம் நோக்கி திரும்பியது. அப்போது, எதிர்பாராத விதமாக லாரியில் இருந்த கேஸ் நிரம்பிய டேங்கர் மட்டும் தனியாக கழன்று விழுந்துள்ளது. அதில் சேதம் ஏற்பட்டு கேஸ் வெளியேறியதால், லாரியில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீச்சி அடித்து கேஸ் வெளியேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, பாதுகாப்பு நடவடிக்கையாக சம்பவ இடத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் கேஸ் நிறுவன பொறியாளர்கள் ஆகியோர் விபத்து குறித்து ஆய்வு செய்தனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் வரை அதன் அருகேயுள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதற்காக திருச்சியில் இருந்து மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, கேஸ் லாரியில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, டேங்கர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட பகுதியில் மத்திய பெட்ரோலிய நிறுவனத்தின் மெக்கானிக் காண்ட்ராக்டர் ராபர்ட் பார்வையிட்டார். அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், "அதிகாலை மேம்பாலத்தில் திரும்பும் பொழுது டேங்கர் விழுந்து விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் லீக்கேஜ் அடைக்கப்பட்டது. இந்த விபத்தால் 80 முதல் 100 கிலோ வரை லீக்கேஜ் ஆகியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக பைபாஸ் சாலையில் தான் டேங்கர் லாரி கொண்டு செல்லப்படும். இன்று தவறுதலாக இப்பகுதிக்கு வாகனம் வந்ததாக தெரிகிறது. இந்த விபத்து எதிர்பாராமல் நிகழ்ந்தது" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், டேங்கர் லாரியின் கான்வாய் பாதுகாப்பாக புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏறத்தாழ 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு டேங்கர் லாரி மீட்கப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டேங்கர் லாரியை 4 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 2 ஆம்புலன்ஸ்கள் பின்தொடர்கின்றன. இந்த டேங்கர் லாரி, பீளமேடு பகுதியில் உள்ள எஃப்.சி.ஐ குடோனுக்கு சென்று கொண்டிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.