கோவை மாவட்ட வனச்சரகத்திற்குட்பட்ட மருதமலை வனப்பகுதியில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுமார் 40 வயதுள்ள பெண் யானை உடல் நலம் குன்றி கிடந்துள்ளது. அதன் அருகில் 3 மாத குட்டி யானை ஒன்றும் தாயை விட்டு பிரியாமல் இருந்து வந்ததை கண்ட வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை டாக்டர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் யானையை பரிசோதனை செய்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் பெண் யானையின் உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்பட்டதை தொடர்ந்து யானைக்கு புற்களை உணவாக அளித்தனர். யானையின் குட்டி தாயை சுற்றி சுற்றி வந்து பாசத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் அருகில் வசிக்கும் மூதாட்டி ஒருவர் யானையை சாமியாக நினைத்து கற்பூரம் ஏத்தி வழிபட்டுள்ளார். மூதாட்டி வழிபடும் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து இன்று பெண் யானைக்கு மூன்றாவது நாளாக தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாய் யானையை விட்டு குட்டியானை பிரிந்து சென்றுள்ளது. குட்டி யானையை காணவில்லை என வனத்துறையினர் ட்ரோன் மூலம் தேடி வருகின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“