Coimbatore girl suicide Principal Meera Jackson arrested under POCSO : கோவை ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் போலீசார், தனியார் மெட்ரிக் பள்ளியின் முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சனை பெங்களூருவில் உள்ள மறைவிடத்தில் வைத்து கைது செய்தனர்.
கடந்த வியாழக்கிழமை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவி, தன் ஆசிரியருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் புகாரை அலட்சியப்படுத்தி, உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக மீரா ஜாக்சன் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பள்ளியின் முன்னாள் முதல்வரைக் கைது செய்யக் கோரி, மாணவியின் பெற்றோர், பள்ளி நண்பர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு முன்பு கடந்த சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்துக்கு போலீஸார் மீரா ஜாக்சனை அழைத்து வந்தனர்.
சிறுமியின் புகாரின் அடிப்படையில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி (31) மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முன்னாள் முதல்வர் தவறிவிட்டதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப் பள்ளி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் மீராவை பள்ளி நிர்வாகம் வேறு பள்ளிக்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது.
மாணவியின் தந்தை, ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அளித்த புகாரை அடுத்து, கோவை லாலி சாலையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் கே.மிதுன் சக்கரவர்த்தி (31) மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்) மற்றும் பிரிவு 9(எல்) (குழந்தையின் மீது ஒன்றுக்கு மேற்பட்ட முறை அல்லது மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்பவர்) 10 (மோசமான பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மிதுன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமை மதியம் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சிறுமியின் உடலைப் பெற குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். பள்ளி முன்னாள் முதல்வரைக் கைது செய்த பின்னரே உடலைப் பெற்றுக் கொள்ளப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தற்போது மீரா கைது செய்யப்பட்டதை அடுத்து, கோவை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ள மாணவியின் உடலை விரைவில் பெற்றோர் பெற்றுக் கொள்வார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.