scorecardresearch

2018ம் ஆண்டின் விபத்திற்கு இழப்பீடு வழங்காத ஓட்டுநர்: 2-வது முறையாக பேருந்து ஜப்தி

கோவையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்காததால் இரண்டாவது முறையாக அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

Express Image
கோவையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு இழப்பீட்டு தொகையை வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் சதீஷ் (வயது 24), பி.ஏ பட்டதாரி ஆவார். இவர் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு உக்கடம் சிக்னல் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதே சமயம் சதீஷின் குடும்பத்தினர் கோவை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 2019-ம் ஆண்டு சதீஷ் குடும்பத்தினருக்கு ரூ.12 லட்சம் விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிட்டார்.

ஆனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் விபத்துக்கான உரிய இழப்பீட்டு தொகை வழங்காததால் வட்டியுடன் சேர்த்து 16 லட்சம் வழங்க கோரி மீண்டும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு 16 லட்சம் இழப்பீடு தொகை வழங்க உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து இழப்பீட்டுத் தொகை வழங்காததால் கோர்ட் உத்தரவுப்படி கடந்த ஜனவரி மாதம் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. இந்நிலையில், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் 7.40 லட்சம் இழப்பீடு தொகை வழங்கினர்.

மீதமுள்ள தொகையை ஒரு மாதத்திற்குள் வழங்குவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் அந்த தொகையை ஒரு மாதம் ஆகியும் வழங்காத காரணத்தினால் அதே அரசு பேருந்து 2-வது முறையாக மீண்டும் ஜப்தி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Coimbatore government bus impounded after causing an accident not paying full compensation