கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டதா? மறுக்கும் டீன்

2 வயதான அந்த பெண் குழந்தைக்கு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சளி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது

By: Updated: February 20, 2019, 12:31:21 PM

கோவையில் 2 வயது பெண் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. ரத்தம் ஏற்றியதாக அரசு மருத்துவமனை மீது பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.

திருப்பூரில் வசித்து வரும் இளம் தம்பதிக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருச்சி அரசு மருத்துவமனையில் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. அதில், பெண் குழந்தை 700 கிராம் எடையுடன் பிறந்ததால், திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து 32 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனால் அந்த குழந்தையின் எடை 1 கிலோ 140 கிராம் அளவுக்கு அதிகரித்தது. இதையடுத்து இரட்டை குழந்தைகளுடன் அவர்கள் திருப்பூரில் வசித்து வந்தனர். இந்தநிலையில், 2 வயதான அந்த பெண் குழந்தைக்கு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சளி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற போது, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஆபத்தான நிலையில் உள்ளது என கூறி ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தையின் இதயத்தில் ஓட்டை இருப்பதாக கூறி உள்ளனர். மேலும் ரத்தம் குறைவாக இருந்ததால் ஜூலை மாதம் 12-ம் தேதி ரத்தம் ஏற்றி உள்ளனர். அது தொடர்பான சிகிச்சை முடிந்த பிறகு அவர்கள் குழந்தையுடன் வீடு திரும்பினர்.

இந்தநிலையில் அந்த குழந்தைக்கு கடந்த 6-ம் தேதி மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு, கழுத்து பகுதியில் கட்டி போன்று இருந்ததாக தெரிகிறது. மேலும் சளித்தொல்லை அதிகளவு இருந்தது. இதனால் அந்த குழந்தையை மீண்டும் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு குழந்தைக்கு பல்வேறு கட்ட சோதனை நடத்தப்பட்டது. இதில், அந்த குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதாக கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை கேட்டு குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

‘எங்கள் இருவருக்கும் ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்லை. ஆனால் குழந்தைக்கு எப்படி ஹெச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டது?’ என்று மருத்துவர்களிடம் அவர்கள் கேள்வி எழுப்பினர். இதைத்தொடர்ந்து அந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் அவர்களின் ஆண் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து தங்களுடைய குழந்தைக்கு கோவை அரசு மருத்துவமனையில் ஏற்றப்பட்ட ரத்தம் காரணமாக தான் ஹெச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் என்று பெற்றோர் குற்றம் சாட்டினர்.

இது குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த குழந்தையின் பெற்றோர் பல்வேறு மருத்துவமனைகளில் குழந்தைக்கு சிகிச்சை அளித்து உள்ளதால் அங்கு வைத்து குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டு இருக்கும். ஹெச்.ஐ.வி.யால் பாதித்துள்ள குழந்தைக்கு தற்போது அரசு மருத்துவமனை ஏ.ஆர்.டி.(Antiretroviral Therapy) சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்றார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Coimbatore government hospital 2 years old baby hiv blood

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X