கோவை அரசு மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணிபிபுரிந்து வருகின்றனர். இதேபோல் சிங்காநல்லூர் வரதராஜபுரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையிலும் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் வேலை செய்கின்றனர்
இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.412 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ரூ.721 வழங்கப்படும் என அப்போதைய மாவட்ட ஆட்சியர் சமீரன் உறுதி அளித்தார். அதன்பின் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

ஆனால் உறுதி அளித்த படி சம்பளம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று கோவை அரசு மருத்துவமனையில் மீண்டும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனவரி மாதத்தில் இருந்து ஊதிய உயர்வு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் 2- மாதங்களாகியும் வழங்கப்பட வில்லை என போரட்டக்காரர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து இன்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை