Advertisment

கோவையில் ஆளுநர் ரவி பங்கேற்ற நிகழ்ச்சி: கருப்பு சட்டை அணிந்த மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு

கோவையில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய நிலையில், இந்த நிகழ்விற்கு கருப்பு சட்டை அணிந்து வந்த மாணவர்களுக்கு பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
Coimbatore Governor RN Ravi students wearing black shirts not allowed to attend function UPSC Tamil News

கோவையில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், "உடல் நலமும் மன நலமும் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் இதற்கு யோகாப் பயிற்சி பெரும் பலன் தரும்." என்றார்.

கோவை பி.எஸ்.ஜி கல்லூரி வளாகத்தில் சிவில் சர்வீஸ் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடும் நிகழ்வு  நடைபெற்றது. இந்நிகழ்வில், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகிவரும் இளைஞர்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர். முன்னதாக இந்த நிகழ்விற்கு கருப்பு சட்டை அணிந்து வந்த மாணவர்களுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.

Advertisment

இந்நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், "சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வருங்காலத்தில் உயரிய பதவிகள் வகிக்கவுள்ள இளைஞர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களது கடின உழைப்பு பாராட்டத்தக்கது. 

தேசத்தின் வளர்ச்சியில் அரசியல் பிரதிநிதிகளின் பங்கும், அரசு அதிகாரிகளின் பங்கும் மிக முக்கியமானதாகும். மக்களின் குறைகளை கேட்டு அறியவும், அவர்களுக்கான கொள்கைகளை வகுக்கவும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது. 

குறிப்பாக கிராமப்புற மற்றும் பின் தங்கிய பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதி இளைஞர்கள் தேர்ச்சி பெற வேண்டும். அவர்கள் அதிகாரிகளாக வரும் பொழுது அவர்கள் சார்ந்த பகுதிகளின் பிரச்சனைகளை உணர்ந்து அந்த மக்களின் வலிகளை உணர்ந்து செயல்படுவார்கள்.

நானும் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் இருந்து சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற்று வந்துள்ளேன். மண்ணெண்ணெய் விளக்கில் படித்துள்ளேன். பள்ளிக்காக 8 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளேன். என்னுடைய கனவும், எனது பெற்றோர்களின் உழைப்பும் தான் என்னை இந்த அளவிற்கு கொண்டு வந்துள்ளது.

திருவள்ளுவரின் 'எண்ணிய எண்ணியாங்கு..' எனும் திருக்குறள் எனக்கு பெரும் உந்து சக்தியாக இப்போதும் உள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் இனிமேல் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையையும் அலுவல் பணிகளையும் சேர்த்து கவனிக்க வேண்டி வரும். எவ்வாறு இவை இரண்டையும் சமாளிக்க வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக வெற்றியை தலைக்கேற்றக்கூடாது. எப்போதும் பணிவோடு இருக்க வேண்டும். நமது வெற்றி என்பது தனிப்பட்ட வெற்றி கிடையாது. அது ஒரு கூட்டு முயற்சியின் வெற்றி என உணர வேண்டும். 

உடல் நலமும் மன நலமும் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் இதற்கு யோகாப் பயிற்சி பெரும் பலன் தரும். வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தத்தை கையாள வேண்டும். நிதி மேலாண்மை மிகவும் முக்கியம். இவற்றோடு சுய ஒழுக்கம், மன உறுதி மிகவும் அவசியமாகும்.

இந்த தேசத்திற்காக நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது மிகவும் அவசியமாகும். எனவே செய்யும் பணியை முழு மனதோடு ஆர்வத்துடன் செய்ய வேண்டும். தொடர்ந்து படித்து அறிவை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். சிவில் சர்வீஸ் பிரிவில் ஏராளமான வாய்ப்புகள் தற்போது உள்ளது.  

பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இதனால் இளைஞர்கள் பெரும் பயன் அடைந்து வருகின்றனர். வளர்ச்சி அடைந்த இந்தியாவின் பலன்களை அனுபவிக்க நாங்கள் இருக்கப் போவதில்லை. இளைஞர்கள் தான் அந்த பலனை அனுபவிக்க போகின்றனர். இளைஞர்கள் தான் இந்த தேசத்தின் சொத்து. அந்த அடிப்படையில் இளைஞர்கள் அவர்களது பொறுப்புகளை உணர்ந்து தேசத்தின் வளர்ச்சிக்காக செயல்பட வேண்டும்" என்று அவர் கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Coimbatore Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment