பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள் மற்றும் வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு சமீபமாக சில நேரங்களில் ஏற்படும் மின்வெட்டால் பாதிப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக நேற்று காலை ஒரு மணி நேரத்தில் மட்டும் மூன்று முறை மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து நீண்ட நேரமாக எக்ஸ்ரே எடுக்க காலதாமதம் ஆனது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நோயாளிகள் மற்றும் உறவினர்கள் செல்போன் லைட் வெளிச்சத்துடன் எக்ஸ்ரே அறை முன்பு குவிந்தனர். இதைத்தொடர்ந்து சிலரை எக்ஸ்ரே எடுக்க இன்று வருமாறு திரும்ப அனுப்பியுள்ளனர். இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். அதேபோல உள்நோயாளிகளின் அனுமதி சீட்டு வழங்கும் இடத்திலும் மின்சாரம் இல்லாமல் கைகளில் எழுதி பதிவு செய்ததால் காலதாமதம் ஏற்பட்டு பொதுமக்களின் கூட்டமும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் கோவை அரசு மருத்துவமனைக்கு மின்வெட்டு ஏற்பட்டால் உடனடியாக மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் தகவல் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil