கோவை: கடந்த ஐந்து நாட்களாக பெய்த அடை மழையும், அவ்வப்போது வீசிய பயங்கர சூறைக்காற்றும் கோவை மாவட்ட வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சூறையாடிவிட்டன.
தொண்டாமுத்தூர் அருகே உள்ள குப்பனூர் பகுதியில் அறுவடைக்குத் தயாராக இருந்த பத்து ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால், விவசாயிகள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் துணைத் தலைவர் பெரியசாமி கவலை தெரிவித்துள்ளார். குப்பனூரில் திடீரென வீசிய சூறைக்காற்றால், 10 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முழுமையாக முறிந்து விழுந்துள்ளன. இதன் காரணமாக, விவசாயிகளுக்கு சுமார் 20 லட்சம் ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் குமுறுகின்றனர். கடன் வாங்கி விவசாயம் செய்த நிலையில், அறுவடை நேரத்தில் ஏற்பட்ட இந்த பேரிழப்பு, வாங்கிய கடனை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்று தெரியாமல் விவசாயிகளைத் திகைக்க வைத்துள்ளது.
தற்போது தமிழ்நாடு அரசு வழங்கும் இழப்பீடு தொகை, மழைக்காலங்களில் வாழை மரங்களுக்கு ஏற்படும் சேதத்திற்குப் போதுமானதாக இல்லை என்று பெரியசாமி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நட்டத்தை ஈடு செய்யும் வகையில், உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.
மேலும், தமிழ்நாடு அரசு ஒரு சிறப்பு குழுவை அமைத்து, கோவை மாவட்டத்தில் மழை மற்றும் காற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, விவசாய விளைபயிர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பெரியசாமி வலியுறுத்தியுள்ளார்.