/indian-express-tamil/media/media_files/2025/06/27/irugur-2025-06-27-23-37-32.jpg)
Coimbatore
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தின் IDBL எண்ணெய் குழாய் திட்டம் கோவை மாவட்டத்தின் இருகூரில் இருந்து கர்நாடக மாநிலம் வரை சுமார் 320 கிலோமீட்டர் தூரத்திற்கு செயல்படுத்தப்படவுள்ளது. இந்த மாபெரும் திட்டம், நாட்டின் எரிபொருள் விநியோகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், இதன் செயல்பாடு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
கோவை மாவட்டம் இருகூர் முதல் திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரையிலான சுமார் 70 கிலோமீட்டர் தூரத்திற்கு, இந்த எண்ணெய் குழாய் விவசாய நிலங்களுக்கு இடையே கொண்டு செல்லப்படுகிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவதுடன், அதைச் சார்ந்துள்ள ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளதாக விவசாயிகள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் இத்திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைத்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்கள் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள், தமிழக அமைச்சர்கள், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர், மத்திய துறை செயலாளர் மற்றும் BPCL நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் எனப் பலரையும் நேரில் சந்தித்து மனுக்களை அளித்துள்ளனர்.
விவசாயிகள் முன்வைக்கும் முக்கிய கோரிக்கை, இந்த எண்ணெய் குழாய்களை விவசாய நிலங்களுக்குப் பதிலாக சாலையோரமாகவே அமைக்க வேண்டும் என்பதுதான். இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுடன், திட்டத்தின் நோக்கத்தையும் நிறைவேற்ற முடியும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், இந்தத் திட்டச் செயலாக்கத்தால், சம்பந்தப்பட்ட விவசாய நிலங்களுக்குக் கடன் பெற முடிவதில்லை என விவசாயிகள் பெரும் கவலை தெரிவித்துள்ளனர். திட்டத்தின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையால், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இந்தக் குறிப்பிட்ட நிலங்களை ஈடாகக் கொண்டு கடன் வழங்கத் தயங்குகின்றன. இது விவசாயிகளின் புதிய முதலீடுகள், விவசாயத் தேவைகள் மற்றும் அவசரச் செலவினங்களுக்கான நிதி ஆதாரத்தைப் பெரிதும் பாதிக்கிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், ஏற்கனவே பல போராட்டங்களையும், பல்துறை அதிகாரிகளை அணுகியும் எந்தவிதமான தீர்வும் எட்டப்படாததால், விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். "இனிமேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாங்கள் எங்கள் உயிரை மாய்த்துக் கொள்வோம்" என மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.